twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதிலும் 'முதல்வன்' கமல்!

    By ஷங்கர்
    |

    Kamal
    தமிழ் திரைப்படத் துறையினர் எப்போதெல்லாம் புதுமைகளுக்கும் விஞ்ஞான முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்களோ அப்போதெல்லாம் அதை உடைத்தெறிவதில் முதலில் நிற்பவர் உலக நாயகன் கமல்ஹாஸன்தான்.

    தொலைக்காட்சியே வேண்டாம் என்று கோஷம் போட்டு ஊர்வலம் போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். அன்று தன்னந்தனி கலைஞனாக நின்று, தொலைக்காட்சி எதிர்கால சினிமாவின் இன்னொரு வடிவம் என்றும், திரைப்பட வளர்ச்சிக்கு அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் கோஷம் போடுவது அறிவீனம் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்தவர் கமல்.

    அவர் சொன்னதுதான் நிஜமானது. இன்று தமிழ் சினிமாவுக்கு பெரும் உறுதுணையாக நிற்பவை தொலைக்காட்சிகள் தான். படத்தில் போட்ட முதலில் பெரும் பகுதியை இன்று தொலைக்காட்சிகள்தான் தருகின்றன, தயாரிப்பாளர்களுக்கு!

    அடுத்து விசிடி - டிவிடியை அடியோடு தடை செய்ய வேண்டும் என்றார்கள். அன்றும் கமல்தான் முதல் குரல் எழுப்பியவர்... 'திருட்டு விசிடி வரும் வரை ஏன் காத்திருக்கிறீர்கள்... நீங்களே உங்கள் படத்தை சிடியாகப் போட்டு அதிகாரப்பூர்வமாக விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளுங்கள். தியேட்டராக இருந்தாலென்ன, சிடியாக இருந்தாலென்ன.. உங்கள் படத்தைக் காசு கொடுத்துப் பார்த்தால் சரிதானே. இது அதிக சினிமா எடுக்கவும் உதவும்' என்று உறைக்கும் படி கேட்டவரும் இவர்தான்.

    அடுத்து டிஜிட்டல் சினிமாவுக்கு எதிர்ப்பு எழுந்தபோது, அதற்கு பதில் தர வெறும் பேச்சோடு நிற்காமல் ஒரு டிஜிட்டல் திரைப்படமே எடுத்து அனைவரது வாயையும் அடைத்தவர் கமல்.

    இன்று ஆன்லைன் மீடியாவுக்கே சில தயாரிப்பாளர்களும், சில திரைத்துறை பிஆர்ஓக்களும் தடைவிதிக்க வேண்டும் என கொக்கரித்து வருகிறார்கள்.

    இன்றும் கமல் ஒருவர்தான் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார். அதுவும் பேச்சோடு நிற்கவில்லை மனிதர். தனது உன்னைப் போல் ஒருவன் படத்தின் டிரைலரை இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி இணைய தளங்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

    எவ்வளவு ஸ்டில்கள் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள், எத்தனை பேட்டிகள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என தனது மீடியா மேனேஜர் நிகில் மூலம் தகவலும் அனுப்பி வைத்துள்ளார்.

    அடுத்த கட்ட சினிமாவை வளர்த்தெடுக்க 'யு ட்யூப்'பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தனது திரைக்கதை பயிற்சிப் பட்டறையில் புரட்சிக் குரல் எழுப்பிய கலைஞனல்லவா... தனது பேச்சை இன்று செயல்வடிவம் பெற வைத்துள்ளார்.

    இன்று பெரும்பாலான இணையதளத்தைத் திறந்தால் முதலில் உங்களை வரவேற்பது கமலின் உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சி அல்லது பேட்டிகளாகத்தான் இருக்கும்.

    இதில்கூட ஒரு சிறப்பைப் பாருங்கள்... உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சியில் ஒரு இடத்தில் போலீஸ் அதிகாரி மோகன்லால், தீவிரவாதியின் படத்தை பேக்ஸில் அனுப்புங்கள் என்று கூறி, அடுத்த கணமே, 'வேண்டாம்... இமெயில் பண்ணுங்கள்!' என்பார். அங்குதான் நிற்கிறார் 'இன்டர்நெட்' கமல்!

    கலை செய்யத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது... அந்தக் கலையை அனைத்துத் தரப்பு மக்களிடமும் சரியாகக் கொண்டு சேர்க்கும் அத்தனை உத்திகளையும் அறிந்திருக்க வேண்டும் என்பது கமலின் அழுத்தமான கருத்து.

    கமலின் கருத்துக்கள் ஆரம்பத்தில் யோசிக்க வைக்கும்... வாதங்கள் கிளப்பும்... இறுதியில் அவையே ஜெயிக்கும்... அவரது படங்களைப் போலவே!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X