எனது பேச்சில் தவறில்லை - சிவசேனாவின் செயல் ஜனநாயக விரோதமானது: ஷாருக்

நியூயார்க் வந்த ஷாருக் கானிடம், சிவசேனாவின் போராட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஷாருக் கான் பதிலளிக்கையில், நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா அனைவரையும் மதித்து, வரவேற்கும் நாடு. இதில் சந்தேகமே கிடையாது.
ஒவ்வொரு இந்தியரும், இந்தியா ஒரு நல்ல நாடு என்பதை நிச்சயம் மறுக்க மாட்டார்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டும் நாடு என்பதை மறுக்க மாட்டார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருபவர்கள் இந்த நாட்டின் விருந்தினர்கள். இதை எந்த உண்மையான இந்தியரும் மறுக்க மாட்டார்.
ஒரு சாதாரண நடிகரான நான் பேசியதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது வியப்பாக உள்ளது. இது அதிகப்படியானது.
இதுபோன்ற செயல்கள், எதிர்ப்புகள், போராட்டங்கள் ஜனநாயக விரோதமானது, ஆரோக்கியமான ஒன்றல்ல, முட்டாள்தனமானது.
இருப்பினும் இப்படித்தான் இந்த உலகம் இருக்கிறது என்றால், நாம் ஒரு நிலையை எடுத்து விட்டால் அதில் உறுதியாக இருந்துதான் ஆக வேண்டும். அந்த தெம்பு எனக்கு உள்ளது என்றார் ஷாருக் கான்.
ஷாருக் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்:
இந் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காவும், மும்பை அனைவருக்கும் பொதுவானது என்று கூறியதற்காகவும் ஷாருக் கான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரது படங்களை மும்பையில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.
கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான மனோகர் ஜோஷி இதுகுறித்து கூறுகையில், மன்னிப்பு கேட்காவிட்டால் ஷாருக் கானின் ஒரு படத்தையும் மும்பையில் ஓட விட மாட்டோம்.
ஷாருக் கானாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் வாபஸ் பெற வைப்போம். இதை அவர் புரிந்து கொண்டால் நல்லது. ஷாருக் கான் மன்னிப்பு கேட்கும் வரை ஒரு படமும் இங்கு ஓட முடியாது என்றார் மனோகர் ஜோஷி.


Click it and Unblock the Notifications











