விஜய்யின் குருவி ரிலீஸ்- குருவிகளை பறக்கவிட்ட ரசிகர்கள்

தமிழகத்தில் ரசிகர்கள் தியேட்டர்களில் குருவிகளை பறக்கவிட்டு கொண்டாடினர்.
சென்னை கே.கே. நகர் விநாயகர் கோவிலில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலன் தலைமையிலானவர்கள் இன்று காலை குருவி' படப்பெட்டிக்கு பூஜை செய்தனர். பின்னர் படப்பெட்டியை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். வழி நெடுக ரசிகர் பட்டாசு வெடித்தனர்.
உதயம் தியேட்டருக்கு சென்றதும் படப் பெட்டிக்கு மீண்டும் பூஜை போடப்பட்டது. அப்போது ரசிகர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
பெட்டி உள்ளே எடுத்து செல்லப்பட்டதும் தியேட்டரில் 101 குருவிகளை ரசிகர்கள் பறக்கவிட்டனர். அபிராமி தியேட்டரில் விஜய் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
இதுபோல் தமிழ்நாடு முழுவதும் குருவி படம் திரையிட்ட தியேட்டர்களில் ஆயிரக்கணக்கான குருவிகளை பறக்கவிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரனும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின்தான் குருவி படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தின் திருட்டு விசிடியை தடுக்க வீடியோ பைரஸி போலீசார் மட்டுமின்றி உள்ளூர் போலீசாரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக வீடியோ பைரஸி போலீசார் சோதனை செய்து குருவியின் திருட்டு விசிடியை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது போதாதென்று திமுகவினரும் கடைகடையாய் சென்று குருவி திருட்டு விசிடியை 'பறக்க விடக்கூடாது' ஸாரி.. விற்கக் கூடாது என்று 'அன்பு எச்சரிக்கை' விடுத்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











