twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் போக்கு-கமல் அதிர்ச்சி!

    By Staff
    |

    Kamal with Mallika Sherawat
    நல்ல சினிமா வர வேண்டும், மாற்றங்கள் வேண்டும், புதுமைகளைப் படைக்க வேண்டும் என்று நினைக்கும் இளம் கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் கமல் ஒரு ஆதர்சன குரு.

    ஆனால் கமல்ஹாசனை சினிமாத்துறையில் உள்ள சிலர்தான் இன்னும் சரிவர புரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ளாமல் உள்ளனர்.

    கடந்த காலங்களில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களுக்கும், கமலுக்கும் இடையே கசப்பான அனுபவங்கள் நேரிட்டதுண்டு. கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்னம் என்ற அந்த வரிசையில் இப்போது ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும் சேர்ந்து விடுவார் போலத் தெரிகிறது.

    இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள தசாவதாரம் படத்தின் தயாரிப்பாளர்தான் ஆஸ்கர் ரவிச்சந்திரன். உலகிலேயே 10 வேடங்களில் ஒரு நடிகர் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

    இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் கூட பெரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சில செயல்களால் கமல்ஹாசன் பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    படம் தொடர்பான சில விஷயங்களில் கமல்ஹாசனைக் கூட கலக்காமல், அவருக்குத் தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துள்ளாராம் ஆஸ்கர்.

    படத்தை கடந்த ஆண்டு மே மாதமே ரிலீஸ் செய்வதுதான் முதலில் இருந்த திட்டம். சிவாஜியுடன் சேர்ந்து தசாவதாரமும் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்டபடி வரவில்லை. இதையடுத்து பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் படம் வெளிவரவில்லை.

    ஒரு கட்டத்தில் தசாவதாரம் குறித்து அத்தனை பேருமே மறந்து விட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு படம் குறித்த செய்திகளின் வரத்து குறைந்து போய் விட்டது.

    இறுதியாக கமல்ஹாசன் பொங்கலுக்கு படம் வரும் என்று உறுதியாக தெரிவித்தார். ஆனால் சில நாட்களியே ஆஸ்கர் ஒரு அறிக்கை விட்டார். அதில், ஏப்ரல் மாதத்திற்கு படம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    அத்தோடு நில்லாமல், சில குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்களை மட்டும் கூப்பிட்டு, தசாவதாரம் படத்திலிருந்து ஒரு பாடல் காட்சியைக் காட்டினார். இது குறித்து கமல்ஹாசனிடம் அவர் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லையாம்.

    அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஏப்ரல் 14ம் தேதி படம் திரைக்கு வந்து விடும் என்றார் ஆஸ்கர். மேலும் மார்ச் 14ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெறவுள்ளதாகவும், இதில் ஜாக்கி சான் கலந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார் ஆஸ்கர்.

    இதுகுறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபேது, அப்படியா என்று ஆச்சரியம் காட்டியவர், அதுகுறித்து எனக்குத் தெரியாது என்றார்.

    செய்தியாளர்களைப் போலவே கமலுக்கும் அது ஒரு செய்தியாகவே இருந்தது. காரணம், கமலிடம் கூட ஆஸ்கர் இதுகுறித்துச் சொல்லவில்லையாம்.

    தனது படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கூறி தெரிய வந்துள்ளதே என்று கமல் ரொம்ப வருத்தப்பட்டாராம்.

    இப்போது ஆடியோ வெளியீட்டையும் தள்ளி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஆஸ்கர். இதனால் படம் கோடை விடுமுறைக்குத்தான் திரைக்கு வரும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் தான் கமலுக்கு பெரும் கவலை பிறந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் 20-20 கிரிக்கெட் போட்டித் தொடர் மே மாதம்தான் தொடங்குகிறது. இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. சென்னை அணியில் வேறு முரளீதரனும், மாத்யூ ஹெய்டனும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

    இந்தப் போட்டிகளை ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளனர். இந்த நேரத்தில் தசாவதாரத்தை ரிலீஸ் செய்தால் அது எப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் என்பதுதான் கமல்ஹாசனின் கவலை. படத்தின் வசூலை அது பெரிதும் பாதிக்கும் என்பதும் கமல்ஹாசனின் முக்கிய கவலை.

    கமல் தரப்பைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் கூறுகையில், தசாவதாரத்தை கமல்ஹாசன் முடித்துக் கொடுத்து விட்டார். அதிலிருந்து முழுமையாக வெளி வந்து விட்டார். படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட பிற வேலைகளை ஆஸ்கர் ரவிச்சந்திரனே இப்போது நேரடியாக கவனித்து வருகிறார். கமல்ஹாசன் அடுத்து நடிக்கவுள்ள காந்தஹார், மர்மயோகி ஆகிய படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் என்றார்.

    என்னதான் நடக்கிறது என்று அறிய ஆஸ்கரையும், அவரது சகோதரர் ரமேஷ் பாபுவையும் கேட்டபோது, எல்லாவற்றையும் மறுத்தனர். கமலுக்கும், தங்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், நல்ல புரிந்து கொள்ளுதல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    அவர்கள் சொல்வது போல இருந்தால் அது நல்லதுதான், சந்தோஷமானதும் கூட.

    தமிழ்த் திரையுலகில் யாருக்குமே கிடைக்காத வரமாக இருந்த தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு வந்து திரையுலகுக்குக் காணிக்கையாக்கியவர் கமல். தமிழகத்தைத் தாண்டி பேசப்படாமல் இருந்த தமிழ் சினிமா, எல்லைகள் தாண்டி, இந்தியா முழுமையும் பேசப்பட காரணமாக இருந்தவர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.

    இந்தியத் திரையுலகில் ஒரு தென்னிந்திய நடிகரைப் பார்த்து இந்திக்காரர்கள் பயந்தார்கள் என்றால் அது கமல்ஹாசனைப் பார்த்து மட்டும்தான். அந்த அளவுக்கு தனது நடிப்பாலும், திறமையாலும் மிரட்டியவர் கமல்.

    அப்படிப்பட்டவரை உரசிப் பார்க்கலாமா?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X