இந்தி சினிமா இந்திய சினிமா ஆகாது: கமல்

சென்னை ஐ.ஐ.டி. அமைப்பும், கமல்ஹாஸனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலும் இணைந்து சென்னையில் சர்வதேச திரைக்கதை பயிற்சி முகாம் நடத்தின. இந்த முகாம் கடந்த 28ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடந்தது. இயக்குநர்கள், இயக்குநராகப் போகும் புதியவர்கள் என 250 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த ஒருவார காலமும், இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளிகள் பங்கேற்று திரைக்கதை குறித்து பாடங்கள் - விவாதங்களில் பங்கேற்றனர். அனைத்து நாட்களிலும் கமல்ஹாஸனும் உடனிருந்து புதிய படைப்பாளிகளை உற்சாகப்படுத்தினார். பாடங்கள் எடுத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. அதில் கமலஹாசன் பேசியதாவது:
சினிமாவில் பாடல்கள் குறித்து இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது. பாடல்களுக்கு நான் எதிரி அல்ல. எல்லா படங்களிலும் ஏன் பாடல்களை திணிக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஒரு படத்தில் 5 அல்லது 6 பாடல்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேபோலத்தான் நடனமும்.
என் சினிமா வாழ்க்கையை ஒரு நடன உதவியாளராகத்தான் தொடங்கினேன். ஆனாலும் சொல்கிறேன்... பாடல்களும், நடனமும் ஒரு படத்துக்கு முக்கியம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்ல. கதையின் போக்கை அது தடுக்கிறது. ஆனால் இசை முக்கியம். அதன் பங்கு மகத்தானது.
சினிமாவில் நிரந்தரமான ஒரு விஷயம் என்ன தெரியுமா... மாற்றம்தான்!. மாற்றம் ஒன்றே மாறாதது.
தொழில்நுட்பரீதியில் ஏற்படும் மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கலாசாரம் என்பது தனிப்பட்ட விஷயம் கிடையாது. கொஞ்ச காலத்துக்கு முன்பு விதவை பெண்களுக்கு மொட்டை அடித்தார்கள். இப்போது யாரும் அப்படி மொட்டை அடிப்பது இல்லை. கலாசாரம் மாறிக்கொண்டே வருகிறது.
அதுபோல் மக்களின் கவனமும் குறைந்து கொண்டே வருகிறது. இனி, நிறைய குறும் படங்கள் எடுக்க வேண்டியதிருக்கும். நீளம் குறைவாக உள்ள படங்கள் அதிகமாக தயாராகும். அது காலத்தின் அவசியம்.
இந்தி சினிமா இந்திய சினிமா ஆகாது:
தேசிய சினிமா என்பது இந்தி சினிமா கிடையாது. இந்தியும் ஒரு மாநில மொழிதான். ஒரு கால கட்டத்தில் இந்தி, தேசிய மொழி ஆவதை எதிர்த்தோம். ஏனென்றால், இந்தி தெரிந்தால் மட்டுமே மத்திய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டதால் இந்தியை எதிர்த்தோம் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை எனது சாதனை அல்ல. எனக்குப் பிந்தைய தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கும் ஒரு அக்கறையின் வெளிப்பாடு. அதேபோல இது ஒன்றும் தொடர்ச்சியான இடைவெளிகளில் நடத்தப்படும் வகுப்புகள் கிடையாது. தேவையென்றால் அடுத்த மாதமே கூட நடத்துவேன்.
இது எனது சாதனையும் அல்ல. ஒரு ஆசானாக இதில் நான் பங்கேற்கவில்லை. ஆசான் என்ற போர்வையில் கற்றுக் கொள்ள உள்ளே நுழைந்த ஒரு மாணவன்தான் நான். இன்னும் கேள்வி எழுப்புகிற திமிர் எனக்குள் அப்படியே இருப்பதால் என்னால் ஒரு ஆசிரியனாக முடியாது.
என்ன சொன்னார் எம்ஜிஆர்?
புதிய படைப்பாளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், அடுத்த கட்டப் படங்களை உருவாக்குவதில் நாம் கவனமெடுக்க வேண்டும் என்பதே.
ஒரு முறை எம்ஜிஆர் அவர்களிடம், உங்களை மாதிரி மக்களுக்கான படங்களை உருவாக்கவே நான் முயற்சித்து வருகிறேன் என்றேன். அதற்கு அவர், அந்தமாதிரி செய்துவிடாதே... நான் உருவாக்கியதைப் போன்ற படங்களை நீயும் ஏன் முயற்சிக்கிறாய்?. ஒரு படிக்கட்டுக்குப் பக்கத்தின் இன்னொரு படிக்கட்டு எதற்கு?. முடிந்தால் அதைவிட உயரத்தில் ஒரு படிக்கட்டை கட்டு என்றார்.
அதற்கான முயற்சிகள்தான் இது. நாளை இந்தப் படிக்கட்டையும் தாண்டி பல படிக்கட்டுகள் கட்டப்பட வேண்டும்.
வரும் நாட்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்த பயிற்சிப் பட்டறைகள் நடத்துவோம். அதற்கான முயற்திகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











