மம்முட்டி-மோகன்லால் ரசிகர்கள் கடும் மோதல்

மலையாள நடிகர் சங்கமான அம்மா, பெரும் முயற்சி எடுத்து தயாரித்துள்ள படம் ட்வெண்டி: 20. பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போய் வந்தது. இந்நிலையில் இந்தப் படம் இவ்வார இறுதியில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே நடித்துள்ளனர், பணம் வாங்காமல்.
முக்கியமான பாத்திரங்களில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, திலீப் மற்றும் ஜெயராம் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விளம்பர போஸ்டர்கள் சமீபத்தில் ஒட்டப்பட்டன. இந்தப் போஸ்டர்களில் மம்முட்டிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டதாகக் கூறி பெரும் ரகளையில் இறங்கிவிட்டனர் மோகன்லால் ரசிகர்கள்.
இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில் மோகன் லால் மம்முட்டி இருவருக்கும் சம முக்கியத்துவம் தருவது போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இப்போது அடுத்த தலைவலி ஆரம்பித்துவிட்டது.
அதாவது, இந்தப் படத்தில் கதைப்படி மோகன்லால் இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறாராம். அதுவரை மம்முட்டி ராஜ்ஜியம்தானாம். இதை அறிந்ததும் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்ட மோகன்லால் ரசிகர்கள், இந்தப் படத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவிக்க, பதறிப்போய்விட்டனர் தயாரிப்பாளர்கள்.
என்ன பண்ணலாம்... என சிண்டைப் பிய்த்துக் கொண்டவர்கள், இப்போது ஒரு யோசனை தெரிவித்துள்ளனர். கொச்சி, கண்ணனூர், கோட்டயம், திருவனந்தபுரம் போன்ற பெரிய நகரங்களில் இந்தப் படத்தை இரு திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதென்றும், இதில் ஒரு தியேட்டரில் மம்முட்டி ரசிகர்கள் மட்டும் படம் பார்க்கலாம், மற்றொன்றில் மோகன்லால் ரசிகர்கள் படம் பார்க்கலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
இருவரின் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாமலிருக்க இந்த ஏற்பாடாம்...
எதற்கெடுத்தாலும் மலையாளத் திரையுலகைப் பாருங்கள் என்று ஒப்பிட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்!!


Click it and Unblock the Notifications











