கஜினி கிளைமாக்சில் மீண்டும் விபத்து: அமீர்கான் காயம்

சூர்யா, அசின் நடிப்பில் தமிழில் சக்கை போடுபோட்ட சூப்பர் ஹிட் திரைப்படமான 'கஜினி' இந்தியில் தயாராகிவருகிறது. இதில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்காட்சி படப்பிடிப்பு ஹைதராபாத்தி்ல் நடந்து வருகிறது. நேற்று எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் அமீர்கானின் இடதுகாலில் மோசமான காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்து கிழே விழுந்துவிட்டார் அமீர்கான்.
உடனடியாக அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் குறைந்தது மூன்று வாரங்களாவது படுக்கையில் ஒய்வு எடுக்கவேண்டும் என்று அமீர்கானை அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்படிப்பு ரத்து செய்யப்பட்டது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தவிர மற்ற காட்சிகள் எல்லாம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.
இதே காட்சியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு படம்பிடித்தபோதும் இடது காலில் அடிபட்டது. ஆனால் அந்த காயத்தை பொருட்படுத்தாமல் மறுநாளே மும்பையில் அவருக்கு நடந்த பாராட்டுவிழாவில் சென்று கலந்து கொண்டார். பட்டகாலிலேயே படும் என்பது போல தற்போது மீண்டும் அந்த இறுதிக்காட்சியில் அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தமுறை காயம் மோசமாக உள்ளதாக அமீர்கான் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். வில்லனை துரத்தி ஓடி பாய்ந்து வீழ்த்துவது போன்ற காட்சியில் காலை உயரே தூக்கியபோது திடீரென்று கீழே விழுந்துவிட்டேன். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இடது காலில் பயங்கர வலி. ஏற்கெனவே பட்ட அடி சரியாகிவிட்டதாக நினைத்துவிட்டேன். ஆனால் இந்தமுறை வலி மோசமாக உள்ளது.
இதுவரை எனக்கு இதுபோன்ற விபத்துகளே நடந்ததில்லை. கீழே விழுந்து அடிபட்டதாலோ, எதன்மீதாவது மோதியோ இந்த விபத்து நடக்கவில்லை. தசை கிழிந்து போனதால் இந்த காயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











