குசேலன் வெற்றி எதிர்பார்த்ததுதான்!-ரஜினி

குசேலன் திரைப்படம் வெளியான கையோடு திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு தரிசனத்துக்காக நேற்று வந்திருந்தார் ரஜினிகாந்த்.
அவருக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினியை வரவேற்று தரிசனம் முடியும் வரை உடனிருந்து அவருக்குப் பிரசாதம் வழங்கினார் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி.
பின்னர் கோயிலுக்கு வெளியே தன்னைச் சூழ்ந்த நிருபர்கள் மற்றும் ரசிகர்களுடன் பேசினார் ரஜினிகாந்த்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு முறை எனது படம் வெளியாகும்போதும் திருப்பதி திருமலைவுக்கு வருகிறேன். இப்போது குசேலன் வெளியானதையொட்டி இங்கே வந்திருக்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். இந்தப் படத்தை எடுத்த அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என ஏற்கெனவே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.
அதற்கேற்ப இப்போது படம் வெளியாகி நல்லா போய்க்கிட்டிருக்கு. இந்தப் படம் வெற்றி பெறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. காரணம் படத்தின் வலுவான கதை. என் ரசிகர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமா இருந்திருக்கும். கதை நல்லாயிருந்தா யார் நடிச்சாலும் ரசிகர்கள் வெற்றியைத் தருவாங்க.
இப்போது என் மகள் சௌந்தர்யா இயக்கும் சுல்தான் தி வாரியரில் நடித்து வருகிறேன். இன்னும் நான்கு தினங்கள் அந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதாராபாத்தில் நடக்கிறது.
இன்னும் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட வேண்டியுள்ளது. இந்தப் படம் நானே எதிர்பார்க்காத அளவு பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. சந்தோஷமாக உள்ளது, என்றார் ரஜினிகாந்த்.
ஒகேனக்கல் விவகாரம் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர்.
அந்த விவகாரத்தில் இனி பேச ஒன்றுமில்லை. என் நிலையைத் தெளிவாகக் கூறிவிட்டேன். மக்கள் புரிந்து கொண்டார்கள். குழப்பம் விளைவிக்க முயல்பவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே கிடையாது என்றார்.


Click it and Unblock the Notifications











