இன்று குசேலன் படப்பிடிப்பு ஸ்டார்ட்!

மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தை தமிழில் ரஜினிகாந்த், பசுபதி, நயனதாரா நடிப்பில் பி.வாசு ரீமேக் செய்கிறார்.
இப்படத்தின் கதையை ரஜினிக்கேற்றவாறு மாற்ற பி.வாசு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு ரஜினி உடன்படவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தொடங்காமல் இழுபறியாக இருந்து வந்தது.
படத்தின் கதையை மாற்றக் கூடாது, மொத்தமே 15 நாட்கள்தான் கால்ஷீட் என வாசுவிடம் ரஜினி கண்டிப்புடன் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குசேலன் படப்பிடிப்பு முறைப்படி இன்று தொடங்குகிறது. ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெறவுள்ளது.
பூஜையில் ரஜினிகாந்த்தும், பிற கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இரு நாயகிகளான நயனதாராவும், மீனாவும் கூட விழாவில் பங்கேற்கின்றனர்.
முன்னதாக ஹைதராபாத்தின் ராமோஜிராவ் திரைப்பட நகரில் பூஜை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் ரஜினியின் வசதிக்கேற்ப தற்போது ஏவி.எம்முக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் தெலுங்கு திரையுலகினரை திருப்திப்படுத்தும் வகையில் ஹைதராபாத்திலும் ஒரு பூஜை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனமும், ஜி.பி.விஜயக்குமாரின் செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை கூட்டாக தயாரிக்கின்றன.


Click it and Unblock the Notifications











