சிங்களப் படத்தில் நடிக்கவில்லை - சூர்யா

இந்த நிலையில், அப்படி ஒரு படத்தில் தான் நடிக்கவில்லை என மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா.
இது தொடர்பாக, சூர்யாவின் மீடியா மேலாளர் நிகில் அனுப்பியுள்ள சூர்யாவின் மறுப்பறிக்கை:
"இலங்கையில் சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப்படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்" என்றொரு செய்தி வெளிவந்து படிப்போரை மட்டுமின்றி என்னையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
நான் இப்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இந்திப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.
மூன்றாவதாக உதயநிதி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். இவை தவிர வேறு எந்தப் படத்திற்கும் நான் ஒப்புதல் அளிக்கவில்லை.
சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்பது முற்றிலும் பொய்யான செய்தி.
சிங்கள படத்தில் நடிக்கும் உத்தேசம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அது என்ன படம்...?
இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் சுரேஷ் குமாரசிங்கே என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இந்திய - இலங்கைக் கூட்டுப் படமாக இது உருவாகிறதாம். இதில் சூர்யா, சிம்ரன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின.
ஆனால் இப்படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுரேஷ் குமாரசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சூர்யா, சிம்ரன் நடிக்க இப்படத்தைத் தயாரிக்கவுள்ளோம். இப்படம் தொடர்பாக நவம்பர் 12ம் தேதி சென்னைக்கு வரவுள்ளோம். முன்னதாக நவம்பர் 5ம் தேதி அல்லது 6ம் தேதி வருவதாக இருந்தோம். ஆனால் அங்கு சில அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால் 12ம் தேதி வருகிறோம்.
ஒருவேளை சூர்யா பின்வாங்கினால், வேறு நடிகரை நடிக்க வைப்போம் என்று கூறியுள்ளார்.
முன்னதாக சிங்களரின் படத்தி்ல் சூர்யா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானவுடன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அதிர்ச்சி வெளியிட்டிருந்தார்.
தமிழக மக்கள் அனைவரும் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











