6 'பேக்' சூர்யா!

முறுக்கேறிய உடலுடன், திரண்டெழும் புஜபலத்துடன் காட்சி தருவதில் ஹீரோக்களுக்கு அலாதிப் பிரியம் இருப்பதில் ஆச்சரியமில்லை.
தமிழ் ஹீரோக்கள் வழக்கமாக இதில் பெரிய அளவில் விருப்பம் காட்டுவதில்லை. டீக் ஆக டிரஸ் போட்டுக் கொண்டு, கலர் கிளாஸ் (அதாங்க கூலிங் கிளாஸ்) போட்டுக் கொண்டு, ஜில்லென்று வந்து போவதைத்தான் அதிகம் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இந்தியில் ஷாருக் கானும், ஹிருத்திக் ரோஷனும் சிக்ஸ் பேக் காட்டி கலக்கிய பின்னர் நம்மவர்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது.
ஒரு காலத்தில் கமல்ஹாசன் சட்டை போடாமல் சில படங்களில் வந்தபோது அது காட்டுத் தீ போல பரவி ஹிட் ஆனது. அதன் பின்னர் வேறு சில ஹீரோக்களும் அதுபோல சட்டையைக் கழற்றிப் பார்த்தனர்.
இந்த நிலையில் சிக்ஸ் பேக் மோகம் தமிழ் சினிமாவில் சூர்யாவை தொற்றிக் கொண்டுள்ளது.
கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்திற்காக 'சிக்ஸ் பேக்' அழகனாக மாறியுள்ளார் சூர்யா. இப்படத்தில் 17 வயது முதல் 65 வயது வரை கொண்ட பல கெட்டப்களில் சூர்யா தோன்றுகிறார்.
அந்தந்த வயதுக்கேற்றபடி உடம்பிலும், முகத் தோற்றத்திலும் மாற்றத்தைக் காட்ட வேண்டிய கட்டாயம். அதற்காக கடுமையாக மெனக்கெட்டு வருகிறாராம் சூர்யா.
அதில் முறுக்கேறிய உடல் கட்டுடன் திகழ வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 8 மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் அழகானாக மாறியுள்ளார் சூர்யா.
இப்படி சிக்ஸ் பேக் அழகனாக மாறிய முதல் தமிழ் ஹீரோ என்ற பெருமையும் சூர்யாவுக்குக் கிடைத்துள்ளது. எப்படி? இப்படி! என்று சூர்யாவிடம் கேட்டபோது, இது கேரக்டருக்காக நடந்த மாற்றம். கதைக்கும் தேவைப்பட்டதால் மிகக் கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடம்பை மாற்றியுள்ளேன்.
நல்ல திடகாத்திரமான, புஜபலம் மிக்கவனாக தோன்ற வேண்டும் என்று கெளதம் கூறி விட்டார். இதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து இப்படி மாறியுள்ளேன். இதன் மூலம் நான் ஏற்றுள்ள பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
சாப்பாட்டில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தினசரி நல்ல பயிற்சியாளரை வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த உடற்கட்டைப் பெற முடியும், தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முடியும் என்று கூறி 'லைட்'டாக உடம்பை முறுக்கி ஒரு 'ஆறு' போட்டுக் காண்பித்தார் சூர்யா!
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கிறார். சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஆகியோர் நாயகிகளாக வருகிறார்கள்.
எப்படி இருந்த சூர்யா இப்படி ஆயிட்டாரு!


Click it and Unblock the Notifications