சிரஞ்சீவிக்கு போட்டியாக களமிறங்கும் பாலகிருஷ்ணா!

சிரஞ்சீவியின் கட்சிக்கு ஆந்திர மக்களிடம் மட்டுமல்லாமல், திரையுலகிலும் செல்வாக்கு பெருகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன ஆந்திராவின் முக்கிய அரசியல் கட்சிகள். முக்கிய நடிகர்களை எல்லாம் தேடித் தேடி தங்கள் பக்கம் இழுத்து வருகின்றன.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்.டி.ஆரின் மகனும், தன் மைத்துனரும், பிரபல நடிகருமான பாலகிருஷ்ணாவை தனது கட்சியில் சேர்க்கிறார்.
இந்த மாத இறுதியில் குண்டூரில் இளைஞர்கள் கர்ஜனை (யுவ கர்ஜனை) என்ற பெயரில் தெலுங்கு தேசம் மாநாடு நடத்துகிறது. இதில் தெலுங்குதேசம் கட்சியில் பாலகிருஷ்ணா இணைகிறார்.
இந்த கூட்டத்தில் பாலகிருஷ்ணாவின் மருமகன்களும் நடிகர்களுமான கல்யாண் ராம், தாரகரத்னா மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். ஆகியோரும் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.
அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர் மன்ற தலைவர்களுடன் பாலகிருஷ்ணா நேற்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்தினார். குண்டூரில் நடக்கும் கூட்டத்தில் ரசிகர்கள் அனைவரையும் அழைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
திரையுலகில் இப்போது பெரிய ஹிட் படங்கள் கொடுக்காவிட்டாலும், பல ஆண்டுகள் சிரஞ்சீவிக்கு கடும் போட்டியைத் தந்தவர் பாலகிருஷ்ணா. ஆந்திரா முழுக்க பெரும் ரசிகர் பட்டாளம் இவருக்கும் உண்டு.


Click it and Unblock the Notifications











