சக நடிகர்களை சீர்குலைக்க குண்டர்களை ஏவும் 'சூப்பர் ஸ்டார்' நடிகர்கள் - திலகன்

திருச்சூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று திலகன் தர்ணா போராட்டம் நடத்தினார். மலையாள வேதி என்ற அமைப்பின் சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது.
சமீபத்தில் திலகனுக்கு மலையாள நடிகர் சங்கம் தடை விதித்தது. இதை எதிர்த்தும், தன்னைப் போன்று தடை விதிக்கப்பட்ட பிற கலைஞர்கள் சார்பிலும் திலகன் தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், சூப்பர் ஸ்டார் நடிகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் மறைமுக திட்டத்துடன், பிற நடிகர்களின் வாழ்க்கையைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
இதற்காக பணத்தை செலவழிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. சிலர் ரசிகர்கள் என்ற பெயரில் குண்டர்களையும் ஏவி விடுகிறார்கள்.
யாரெல்லாம் தங்களுக்குப் பிடிக்காதோ அவர்களுக்கு எதிராக ரசிகர்களை ஏவி விடுவதற்கு பெருமளவில் அவர்களுக்குப் பணத்தையும் கொடுக்கிறார்கள் என்றார் திலகன்.
திலகனின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டு மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்ற படத்தில் நடித்து வந்தார் திலகன். ஜோஷி இதை இயக்குகிறார். இந்த நிலையில் திடீரென கேரள திரைப்பட ஊழியர்கள் சம்மேளனம் திலகனுக்கு தடை விதித்து விட்டது. இதனால் எந்தப் படத்திலும் நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் திலகன்.
இதற்கு ஒரு முக்கிய சூப்பர் ஸ்டார் நடிகரே காரணம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் யார் அந்த சூப்பர் ஸ்டார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











