'வச்சுக்கவா உன்னை மட்டும்...' சிம்பு!

ரஜினி ஸ்டைலில் நடிப்பதையும், ரஜினியின் பன்ச் வசனங்களை உச்சரிப்பதிலும் அலாதிப் பிரியம் காட்டுபவர் சிம்பு. இவரது ஆரம்ப காலப் படங்கள் ரஜினி வாசனை நிறையவே வீசியிருப்பதை காணலாம்.
இந்த நிலையில் தனது சிலம்பாட்டம் படத்தில் ரஜினியின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளார்.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினி ஆடிப் பாடிய வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள .. என்ற சூப்பர் ஹிட் பாடலை தனது சிலம்பாட்டத்தில் இடம் பெற விருப்பம் தெரிவித்தார் சிம்பு. இதையடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தனது தந்தை இசைஞானியின் இன்னிசையில் உருவான இப்பாடலை சிம்புவின் டேஸ்ட்டுக்கேற்ப சூப்பராக ரீமிக்ஸ் செய்துள்ளாராம்.
சூப்பர் கெட்டப்பில் இந்தப் பாட்டுக்கு ஆடிப் பாடியுள்ளாராம் சிம்பு. கூட ஆடியிருப்பவர் 2வது நாயகியாக நடிக்கும் சானா கான் என்கிறார்கள்.
ஏற்கனவே ஆட்டிய 'சட்னி'யை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் 'ரீமிக்ஸியில்' போட்டுக் கொண்டிருப்பார்களோ!


Click it and Unblock the Notifications











