நவ16ல் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்!

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கம் சார்பில் ராமேஸ்வரத்தில் பேரணி, பொதுக் கூட்டம் நடந்தது. அடுத்து சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் திரையுலகினர் சார்பில் மனிதச் சங்கிலி நடந்தது. கடந்த 1ம் தேதி நடிகர் சங்கம் சார்பிலும், 5ம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சார்பிலும் உண்ணாவிரதம் இருந்தனர்.
நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விஜய், 'இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால் 30,000 பேர்தான் தந்திகள் அனுப்பியதாக பின்னர் திரைப்பட தொழிலாளர் உண்ணாவிரதத்தில் அவரே தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை தமிழருக்காக விஜய் ரசிகர் மன்றத்தினர் தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 16ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் சேகரிடம் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு போலீசாரும் அனுமதி வழங்கியுள்ளனர்.
விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தனியாக போராட்டம் அறிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











