கர்நாடக ரசிகர்களுக்கு ரஜினி 'அட்வைஸ்'

ஓகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினையில் கன்னட அமைப்பினரைக் கண்டித்து தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி ஆவேசமாக பேசினார்.
இதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ரஜினிக்கு கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதிப்பதாகவும், அவரது படங்களைத் திரையிட விட மாட்டோம் என்றும் வாட்டாள் நாகராஜ் அறிவித்தார்.
மேலும், முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகை ஜெயமாலா போன்றோர் கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.
ரஜினிக்கு எதிராக அங்கு போராட்டமும் வெடித்தது. இதையடுத்து பதிலடி கொடுக்க கர்நாடக ரஜினி ரசிகர் மன்றத்தினர் களத்தில் குதித்தனர்.
அங்குள்ள மாநில ரசிகர் மன்ற தலைவராக சந்திரகாந்த் என்பவர் உள்ளார். இவர் ரஜினியின் அண்ணன் மருமகன் ஆவார். மாநில செயலாளராக வெங்கடேஷ் உள்ளார்.
இருவரும் கர்நாடகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை திரட்டி வாட்டாள் நாகராஜூக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட தயாரானார்கள். பெங்களூர் தமிழ் சங்கத்துக்கும் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த ரஜினி உடனடியாக தலையிட்டு போராட்டத்தை கைவிடும்படி ரசிகர் மன்றத்தினருக்கு உத்தரவிட்டு போட்டுள்ளார்.
இதுகுறித்து சந்திரகாந்த் கூறுகையில், வாட்டாள் நாகராஜ் ஒரு பொருட்டே இல்லை. தேர்தலை மனதில் வைத்து அவர் கலவரம் செய்கிறார். ரஜினி எங்களுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது நீங்களாக எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டார்.
இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுப்பது என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். அதுவரை நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார். எனவே நாங்கள் போராட்டத்தை கை விட்டு விட்டோம் என்றார்.
வெங்கடேஷ் கூறும்போது, ரஜினி கேட்டுக் கொண்டதால் அமைதி காக்கிறோம். இல்லாவிட்டால் தவிடு பொடியாக்கி விடுவோம் என்றார்.


Click it and Unblock the Notifications











