»   »  'பொன்னர் சங்கர்' பிரசாந்த்!

'பொன்னர் சங்கர்' பிரசாந்த்!

Subscribe to Oneindia Tamil
Sneha and Prashanth
முதல்வர் கருணாநிதி எழுதிய மாபெரும் சரித்திர நாவலான பொன்னர் சங்கர் திரைப்படமாகத் தயாராகிறது. இதில் பொன்னர் - சங்கர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நடிகர் பிரசாந்த்.

பிரசாந்தின் தந்தையும் பிரபல நடிகருமான தியாகராஜன், தனது லட்சுமி சாந்தி மூவீஸ் மூலம் தயாரித்து இயக்குகிறார் இந்தப் படத்தை.

இதுகுறித்து தியாகராஜன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது;

நான் சின்ன வயதில் படித்து பிரமித்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்று பொன்னர் சங்கர். இந்தக் கதையை கடந்த ஆண்டே என்னிடம் கொடுத்து திரைப்படமாக்குமாறு பணித்தார் முதல்வர் கலைஞர் அவர்கள். பொன்னர் சங்கரை திரைப்படமாக்குவது அத்தனை சாதாரண பணியல்ல. மிகப் பிரமாண்டமான புராஜக்ட் அது.

எவ்வளவு செலவு பிடிக்கும் என்று கூடத் தெரியாது. அவ்வளவு பெரிய படத்தை எடுக்க என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளத்தான் இந்த ஓராண்டு காலத்தை எடுத்துக் கொண்டேன்.

இந்தப் படத்துக்காக, கடந்த ஓராண்டு காலமாக எல்லா படங்களையும் ஒதுக்கிவிட்டு மெனக்கெட்டிருக்கிறார் பிரசாந்த். நீளமாக முடி வளர்த்து, சிலம்பம் போன்ற மரபுக் கலைகளைக் கற்று இந்தப் படத்துக்காகவே தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுவரை அவர் நடித்த படங்களிலேயே மிகச் சிறப்பானது, பிரமாண்டமானது எனும் சிறப்புக்குரிய படம் பொன்னர் சங்கராகத்தான் இருக்கும். உலக அளவில் பேசப்படும் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, செலவைப் பற்றிக் கவலைப்படாமல் நானே தயாரித்து இயக்குகிறேன்.

இதுவரை எத்தனையோ படங்கள் ஆஸ்கர் அகாடமியின் கதவைத் தட்டியுள்ளன. ஆனால் எதுவும் வென்றதில்லை. அந்தக் குறையை நீக்கும் படமாக பொன்னர் சங்கர் அமையும்.

கலைஞர் எழுத்தில் ஒரு வரியைக் கூட மிஸ் பண்ணாமல் அதேநேரம் விறுவிறுப்புடன் கூடிய படமாக பொன்னர் சங்கர் அமையும் என்றார் தியாகராஜன்.

என் வாழ்க்கையில் இதைப் போன்ற ஒரு பிரமாண்ட படத்தில் நான் நடித்ததில்லை. என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய புராஜக்டை கொடுத்த கலைஞருக்கு நன்றி, என்றார் பிரசாந்த்.

படத்துக்கு இசையமைக்க இளையராஜாவிடம் முதல்வர் கருணாநிதியே நேரடியாகக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் ராஜாவின் முடிவு என்ன என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.

நாயகிகள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் என்றார் தியாகராஜன்.

Please Wait while comments are loading...