சல்மான் கானைப் பார்க்க திரண்ட ரசிகர்கள் - போலீஸ் தடியடி

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர தர்தாவை ஆதரித்து ரோட்ஷோ நடத்தினார் சல்மான் கான். இதையடுத்து பெரும் கூட்டம் கூடி விட்டது. ரசிகர்கள் கட்டி ஏறி காதை அறுக்காத குறையாக குவிந்து விட்டனர்.
சல்மான் கான் வருகை தந்த சிஷ்டியா காலனி பகுதியில் ரசிகர்கள் வெள்ளம் அலை மோதியது. திறந்த ஜீப்பில் சல்மான் (சட்டையைக் கழட்டாமல்தான்) வந்ததைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் கை குலுக்க முண்டியடித்தனர். சிலர் சல்மானின் ஜீப்பி்ல ஏறவும் முயன்றனர்.
நிலைமை விபரீதமாகி விடப் போகிறதே என்று பயந்த போலீஸார் தடியடியில் இறங்கி ரசிகர்களை கலைத்து விரட்டினர். மிகுந்த சிரமப்பட்டு ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர் போலீஸார்.
இந்த அமளியால் அருகில் இருந்த சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன. இப்படி அமளி நிலவிய நிலையில் ஜீப்பில் வாக்கு சேகரித்தபடி சென்றார் சல்மான்.


Click it and Unblock the Notifications











