83 நாயகிகள்-150 பெண்களுக்கு தாலி!

யாரந்த கில்லாடி என்கிறீர்களா... என்றும் மார்க்கண்டேயனான சிவக்குமார்தான்.
இப்போதும் ஹீரோ போலவே இளமைத் தோற்றத்துடன் காட்சிதரும் சிவக்குமார், தன் வீட்டிலேயே இரு சூப்பர் ஹீரோக்கள் உருவாகிவிட்டதால், தன் சினிமா பயணத்துக்கு செல்ப் பிரேக் போட்டுக் கொண்டுள்ளார்.
ஒருகாலத்தில் காதல் மன்னனாக திரையில் வெளுத்துக் கட்டிய சிவக்குமார் மீது இதுவரை எந்த கிசுகிசுவோ தவறான செய்திகளோ வந்தது கிடையாது. மது, சிகரெட் என எந்தப் பழக்கத்துக்கும் அவர் அடிமையானதும் இல்லை. அவரது தொழில் எதிரிகளும் போற்றும் அளவு ஒழுக்க சீலராகவே வாழ்ந்து வந்திருக்கிறார்.
கோவையில் தான் படித்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல் கண்காட்சியை நேற்று துவக்கி வைத்த அவரிடம் இதுகுறித்து மாணவர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில்:
மாணவர்களின் சாதனைக்கு, அடிப்படை ஒழுக்கம் அவசியம். நான் இதுவரை திரைப்படங்களில் 150 பெண்களுக்கு தாலி கட்டி உள்ளேன். 83 கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் ஒழுக்கம் தவறியதில்லை.
மது, மாது, சூது போன்ற கெட்ட பழக்கங்கள் என்னிடம் என்றுமே கிடையாது. நான் சுத்தமாக இருந்ததால்தான் என் வீட்டிலும் இரண்டு ஹீரோக்களை உருவாக்க முடிந்தது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் எனக்கு கல்வி அறிவு போதித்த ஆசிரியர்கள்தான். எனவே மாணவர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் ஒழுக்கத்துக்கு ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றார்.
முன்னதாக சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு கூடத்துக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை கோவை மத்திய ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதனை அப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் என்ற முறையில் சிவகுமார் பெற்று கொண்டார்.
சந்தேகமில்லை, மாணவர்களுக்கு சிவக்குமார் ஒரு நல்ல பாடம்தான்!


Click it and Unblock the Notifications











