'ஆர்ப்பாட்டம் கூடாது' - ரசிகர்களுக்கு கமல்!

தசாவதாரம் படத்தை தரிசிக்க உலகெங்கும் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்துள்ளனர். இதோ ரிலீஸும் நெருங்கி விட்டது. இதை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகளுடன் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆனால் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளாராம். அதாவது அமைதியான முறையில் படத்ைத வரவேற்க வேண்டும். பிரமாண்டமான ஏற்பாடுகள் கூடாது, குறிப்பாக ஆடம்பரம், படோடபம் கூடவே கூடாது என ரசிகர் மன்றத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து அகில இந்திய கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி குணசீலன் கூறுகையில், படம் திரையிடப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பேனர்கள் வைக்க வேண்டும் என எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படம் வந்த பின்னர் 3 நாட்களுக்கு மேல் அவற்றை வைத்திருக்கக்கூடாது எனவும் நாங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளோம்.
வழக்கமாக அபிராமி தியேட்டரில் ஒவ்வொரு படத்தையும் பிரமாண்டமாக வரவேற்போம். ஆனால் இப்போது அது மெகா மால் ஆகி விட்டதால் அவ்வாறு செய்யமுடியாது.
கட் அவுட்கள், பேனர்களுக்கு ஆரத்தி எடுப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. அதை கமல்ஹாசன் விரும்ப மாட்டார்.
கமல்ஹாசன் ரசிகர் மன்றம் தற்போது நற்பணி மன்றமாக இயங்கி வருகிறது. எனவே அதற்கேற்ப, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த குடிமக்களை தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்து வரும் பணியை ரசிகர்கள் செய்வார்கள் என்றார்.
ஆனால் கமல்ஹாசன் ரசிகர்கள் தசாவதாரத்தை பிரமாண்டமாக வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர். சென்னையில் மட்டும் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் 300க்கும் மேற்பட்ட கட் அவுட்கள், பேனர்கள், தட்டிகள் வைக்கப்படவுள்ளனவாம்.
இதற்கிடையே, கனடாவில் தசாவதாரத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளதாம். மொத்தம் 18 பிரிண்டுகளுடன், பல்வேறு தியேட்டர்களை தசாவதாரம் அங்கு அலங்கரிக்கப் போகிறதாம்.


Click it and Unblock the Notifications











