காங்கிரஸா...தனிக்கட்சியா..இன்று சொல்கிறார் விஜய்?!

அரசியலில் குதிக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறார் நடிகர் விஜய். பல மாதங்களாகவே இதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளார்.
ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் என அனைவரையும் சந்தித்து தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார் விஜய்.
ஏற்கெனவே தனது மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் தோறும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் திறந்து வருகிறார் விஜய். உறுப்பினர் சேர்ப்பு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் இயக்கம் அப்படியே அரசியல் கட்சியாக மாறும்.
கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவை குறித்தும் பரிசீலனைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசியதன் மூலம் அவர் காங்கிரசில் இணையப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ராகுல் தெளிவுப்படுத்திவிட்டார்.
பத்தோடு பதினொன்றாக விஜய் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்போம் என்றும், அவருக்கு வயதாகிவிட்டதால் இளைஞர் காங்கிரஸில் சேர்த்துக் கொள்ள முடியாது, பொதுவாக வேண்டுமானால் சேர்த்துக் கொள்வோம் என்றும் கூறி இன்னும் கடுப்பேற்றிவிட்டார்.
எனவே காங்கிரஸில் சேருவதா அல்லது தனியாகவே கட்சி துவங்கி தமிழ்நாட்டு அரசியலைக் கலக்குவதா என்பது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார் விஜய்.
இந்நிலையில் இன்று 1 மணிக்கு பத்திரிகையாளர்களை தனது ஷோபா கல்யாண மண்டபத்தில் சந்திக்கிறார் விஜய். அங்கே தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications