பொன்விழா நாயகன் கமல்!

இன்றுதான் கலைமகளின் தவப்புதல்வர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசன் கலையுலகில் காலடி பதித்தார். இன்று அவரது கலைப்பணிக்கு பொன்விழா நாள்.
1959-ம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ம் தேதி பீம்சிங் இயக்கத்தில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் கலையுலகில் கால் பதித்தார் கமல்ஹாசன். அன்று அவருக்கு வயது 5. ஜெமினி கணேசன் - சாவித்ரி தம்பதிகளுக்கு மகனாக அந்தப் படத்தில் நடித்த கமலுக்கு, முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து சிறந்த கலைஞராக தன்னை நிலைநிறுத்திய கமல், ஹிந்தி மற்றும் வங்காளப் படங்களிலும் முத்திரைப் பதித்தவர்.
இந்த 50 நெடிய வருடங்களில் அவர் நடிப்பு வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் ஏராளம். இன்று அவரது திரைவாழ்க்கையின் பொன்விழா நாள்.
மிகப் பெரிய திருவிழாவாக இதைக் கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவற்றைத் தடுத்துவிட்ட கமல், எப்போதும் போல இன்றும் தனக்கு ஒரு சாதாரண நாளாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூறிவிட்டாராம்.
பொன்விழா கொண்டாட்டங்கள் குறித்துக் கேட்டால், 'மக்கள் எப்போதும் என்னிடம் அன்பாகவே இருந்துள்ளார்கள். இந்த 50 ஆண்டுகளில் பெரும்பாலும் நல்லவர்களிடமே அதிகம் இருந்திருக்கிறேன். அதனால்தான் பெரிய விபத்து எதுவும் எனக்கு நேர்ந்துவிடவில்லை. அதுவே பெரிய சந்தோஷமில்லையா', என்கிறார் கமல் தனக்கே உரிய ஸ்டைலில்.
திரையுலகம் சார்பில் அவருக்கு விழா எடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இன்னொரு பக்கம் கலைஞர் டிவியும் கமலுக்கு பொன்விழா கொண்டாடுகிறது.
அடுத்த சில தினங்களில் கமல் - மோகன் லால் நடிப்பில் உருவான உன்னைப்போல் ஒருவன் தமிழிலும், அதே படம் ஈநாடு எனும் பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது.
அதற்கடுத்து மிஷ்கின் மற்றும் கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இரு மெகா படங்களில் நடிக்கவிருக்கிறார் கமல்.
இந்த நல்ல நாளில் கமல்ஹாசனை வாழ்த்துவோம்... அந்த வாழ்த்து ஒட்டுமொத்த திரையுலகையும் வாழ்த்துவதற்குச் சமம்!.


Click it and Unblock the Notifications











