சிக்கு புக்கு விவகாரம்... 'இறங்கி வந்த' ஆர்யா!
தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்தின் முடிவில் 'சிக்கு புக்கு' படத்துக்கு டப்பிங் பேச சம்மதித்துள்ளார் நடிகர் ஆர்யா.
ஆர்யா- ஸ்ரேயா ஜோடியாக நடித்தபடம் சிக்குபுக்கு. மணிகண்டன் இயக்கினார். மீடியா ஒன் குளோபல் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' வேலைகள் நடக்கின்றன.
இந்த நிலையில் ஆர்யா இந்த படத்துக்கு டப்பிங் பேச மறுப்பதாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். மனுவில் ஆர்யா மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை கூறினார்.
சிக்குபுக்கு படத்துக்கு ஆர்யா 5 நாட்கள் 'டப்பிங்' பேச வேண்டும். 'டப்பிங்' தியேட்டரை பல தடவை புக் செய்து ஆர்யாவை அழைத்தும் வரவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டது. படத்தை ரிலீஸ் செய்யவும் கால தாமதம் ஆகிறது. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்துக்கு பிறகு இப்படத்தை வெளி யிடுமாறு ஆர்யா நிர்ப்பந்திக்கிறார். முதல்வர் பேரன் பெயரை வேறு தவறாகப் பயன்படுத்துகிறார்.
ஒரு நடிகர் யோசனைப்படி படத்தை ரிலீஸ் செய்யும் நிலையில் எங்கள் நிறுவனம் இல்லை என்றெல்லாம் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இப்பிரச்சினை பற்றி ஆர்யாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு தயாரிப்பாளர், சங்கத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஆர்யா, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சிவசக்தி பாண்டியன், தயாரிப்பாளர் முரளி மனோகர் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. 'டப்பிங்' பேச ஆர்யா சம்மதித்தார். அடுத்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து 5 நாட்கள் சிக்கு புக்கு படத்துக்கு 'டப்பிங்' பேசுவதாக அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











