twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாக்காளர் பட்டியலில் பெயரில்லை-கமல் எரிச்சல்!

    By Staff
    |

    Kamal Hassan
    ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் பெயர் இந்த முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் கமலஹாசன் அதிர்ச்சி அடைந்தார். வாக்களிக்க முடியாமல் போனது பெரும் வருத்தம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

    தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற கமல்ஹாசன் தவறியதே இல்லை. காலையிலேயே போய் வாக்களித்து விடுவார் கமல்.

    ஆனால் இந்த முறை அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் மாயமாகியுள்ளது. இதனால் கமல்ஹாசனால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளார் கமல்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் என் பெயர் விடுபட்டு விட்டதே, ஏன் என்று தேர்தல் ஊழியர்களிடம் கேட்டபோது, நாங்கள் உங்கள் வீட்டில் உங்களைத் தேடிப் பார்த்தபோது, நீங்கள் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நான் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும், தேர்தலில் ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை என்று சொல்லி வருகிறேன்.

    பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இதை வலியுறுத்தி வருகிறேன். அப்படிப்பட்ட எனக்கே ஓட்டு இல்லை என்று சொல்கிறார்கள்.

    தேசத்தின் நிலையை நிர்ணயிக்கப்போகிற தேர்தல் இது. இதில் எனக்கு பங்கு இல்லை என்றால் வருத்தப்படாமல் இருக்க முடியாது. நான் யார் தெரியுமா? என்ற வீராப்பு குரல் இல்லை இது. நான் யார் என்றே தெரியாத நிலை ஏற்பட்டதற்கான வருத்தக் குரல்தான் இது.

    இது பற்றி தேர்தல் அலுவலக ஊழியர்களிடம் விசாரித்தபோது, நீங்கள் ஓட்டுப் போடுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். வாய்ப்பை மக்கள்தான் கொடுக்க வேண்டும்.

    பிரதமரையும், மந்திரிகளையும் நியமிக்கிற தகுதியும், வாய்ப்பும் ஜனங்களுக்குத்தான் உண்டு.

    கு.ஞானசம்பந்தனுக்கும் ஓட்டில்லை..

    ஓட்டு மூலம் நம் கருத்தை சொல்ல முடியவில்லை என்றால் ஜனநாயகம் என்பதில் அர்த்தம் இல்லையே?... என் நண்பர் கு.ஞானசம்பந்தத்துக்கும் இதேபோல் ஓட்டு கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.

    படித்தவர்களையும் ஒதுக்குகிறார்கள். படிக்காத என்னையும் ஒதுக்கி விட்டார்கள். அப்படியானால் 100 கோடி ஓட்டு என்பது நிஜமா? எங்கேயோ தப்பு நடந்து விட்டது. கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் தவறு செய்து விட்டார்கள் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

    நான் வீட்டு வரி, மின்சார வரி கட்டிக் கொண்டு இருக்கிறேன். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் மனித தவறு நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை.

    நான் அரசியல்வாதி அல்ல. ஆனால் எனக்கு அரசியல் தெரியும். முதல்வர் தன்னை பாமரன், சாதாரணமானவன் என்று சொல்கிறார். அவரை விட நான் சாதாரணமானவன். பாமரன்.

    எனக்கு ஏற்பட்ட நிலை போன்று இன்னொரு சாமான்யனுக்கு ஏற்படக் கூடாது.

    ரூ. 1 லட்சம் நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் வந்தேன்..

    ஹைதராபாத்தில் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்தால் எனக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். அதைக் கூட நான் பொருட்படுத்தாமல் வந்தேன். ஆனால் எனக்கு ஓட்டு இல்லையென்று சொல்விட்டார்கள். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என்றார் கமல்ஹாசன்.

    தேர்தல் அதிகாரிகளின் அலட்சியத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இப்படித்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவின் பெயரையும் பட்டியல் மாற்றிக் குழப்பினார்கள். இப்போது நாடறிந்த கமல்ஹாசனின் பெயரையே, வீட்டில் ஆள் இல்லை என்று கூறி நீக்கியுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X