மீண்டும் ரஜினியுடன் பிரபு!

ரஜினி, கமல் ஆகிய இரு பெரும் துருவங்களுடன் இணைந்து நடிப்பது என்பது நடிகைகளுக்கு மட்டுமல்ல, நடிகர்களுக்கும் கூட பிடித்தமான விஷயம்தான். இருவருடன் இணைந்து நடிப்பதால் புதுவித அனுபவம் கிடைக்கும் என்பதால் அந்த வாய்ப்புக்காக நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியம் இல்லைதான்.
அந்த வகையில், பிரபு இருவருடனும் இணைந்து நடித்த பெருமைக்குரியவர். அதிலும் ரஜினியும் நிறையப் படங்களில் நடித்துள்ளார் பிரபு. தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், சந்திரமுகி என இணைந்து நடித்த பிரபு, ரஜினியை வைத்து மன்னன் படத்தையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். குசேலன் படத்தில் இடம் பெறும் முக்கிய கேரக்டரில் பிரபுவை நடிக்க வைக்க ரஜினி முடிவு செய்துள்ளார். இதை ரஜினியே பிரபுவை நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வரும் பிரபுவை திடீரென ரஜினியும், இயக்குநர் பி.வாசுவும் போய்ப் பார்த்துள்ளனர். அப்போது பிரபுவிடம், குசேலன் படத்தில் நடிக்கிறீர்கள் என்று ரஜினி கூற சந்தோஷமாகி விட்டாராம் பிரபு.
ரஜினியே தன்னைத் தேடி வந்து நடிக்க கூப்பிட்டதால் நெகிழ்ச்சியாகி விட்டாராம் பிரபு. சந்தோஷத்துடன் அந்த வாய்ப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











