ரூ 50 லட்சம் கொடுத்த முன்னாள் மனைவிக்கு பிரகாஷ் ராஜ் பாராட்டு!
மிக மிக சிக்கலான தருணத்தில் தனக்கு ரூ 50 லட்சம் கொடுத்து உதவிய முன்னாள் மனைவி லலிதகுமாரியைப் பாராட்டியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், இனி அவர் எனது சிறந்த தோழி என்று கூறியுள்ளார்.
தமிழ் - தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தனது முதல் மனைவி லலித குமாரியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்தான கையோடு, இந்திப் படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றும் போனி வர்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
கடந்த வாரம் பிரகாஷ் ராஜுக்கு எதிரான வழக்கு ஒன்றில் லலிதகுமாரி அவருக்கு உதவினார். தனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் சொத்து பத்திரங்களை பிணையமாக வைத்து பிரகாஷ்ராஜை சிக்கலில் இருந்து மீட்டார்.
இது குறித்து பிரகாஷ்ராஜ் கூறுகையில், "சினிமா பைனான்சியர் ஒருவர் நான் தயாரித்து வெளியிட்ட பயணம் படத்தை தடை செய்யக்கோரி எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். சில வருடங்களுக்கு முன் நான் வாங்கிய கடன் அது. அந்தக் கடன் குறித்த பத்திரங்களில் எனது முன்னாள் மனைவி லலிதகுமாரியும் எனக்காக கையெழுத்து போட்டிருந்தார். இந்த வழக்கில் படம் தடைபடும் அளவுக்கு ஆபத்து இருந்தது.
எனவே அவரையும் இந்த பிரச்சினையில் இழுத்தனர். ஆனால் லலிதகுமாரி என் பக்கம் நின்று உதவி செய்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். லலிதா தற்போது எனக்கு நல்ல தோழியாகி விட்டார். இருவரும் பைனான்சியர் மீது மோசடி வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
பயணம் படம் ரிலீசாகி வெற்றிக்கரமாக ஓடுகிறது. இந்த படத்தை ஜெயிக்க வைத்த ரசிகர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...", என்றார்.


Click it and Unblock the Notifications











