ரஜினிக்கு மேலும் இரு தினங்கள் சிகிச்சை! - ஐஸ்வர்யா
சென்னை: ரஜினிக்கு மேலும் இரு தினங்கள் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் பின்னர் வீடு திரும்பி ஓய்விலிருப்பார் என்றும் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.
கடந்த 29-ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் ராணா படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பியபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக இரு முறை அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் ரஜினிக்கு அஜீரண கோளாறும், நீர்சத்து குறைவும் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சலும் சளியும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பினார்.
அதன் பிறகு போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரஜினி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு மருத்துவ பரிசோதனை நடந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவ நிபுணர் ஒருவர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தார். பரிசோதனைக்குப் பின் ரஜினிகாந்த் சில நாட்கள் முழுமையாக ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுரை கூறினர்.
இதற்கிடையே ரஜினிகாந்த் மேலும் 2 நாட்கள் போரூர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று அவரது மகள் ஐஸ்வர்யா கூறினார். அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











