காணாமல் போன சிம்புவின் கார் மோதி ஒருவர் பலி!

நடிகர் சிம்பு மற்றும் அவருடைய சகோதரர் குறளரசன் இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு விருந்துக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவதற்காக வெளியே வந்தபோது கார் மற்றும் டிரைவரை காணவில்லை என்றும் இதனால், ஹோட்டலிலேயே சிக்கி தவித்ததாகவும் தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
கார்திருடு போனதாக சிம்பு போலீசில் புகார் செய்தார் என்றும், ஆனால் கார் பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், சிம்பு குடிப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்பதற்காக அவர் அம்மா உஷாதான் இப்படிச் செய்ததாகவும் போலீசில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சிம்புவின் தந்தை ராஜேந்தர் இதை மறுத்திருந்தார். படப்பிடிப்புக்காக சிம்பு இலங்கை சென்று இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என்றும், குறளரசன் தான் அந்தக் காரை ஹோட்டலுக்கு கொண்டு சென்றார் என்றும், அப்போது தான் அந்த கார் திருடு போனதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கார் திருடு போனது குறித்து மீண்டும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. டிரைவர் வசந்த் என்பவர்தான் காரை திருடிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த காரை போலீசார் தேடி வந்தனர்.
உத்திரமேரூரில் விபத்து!:
இந் நிலையில், உத்திரமேரூர் அருகே உள்ள மங்களம் கூட் ரோட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது இந்தக் கார் மோதியுள்ளது.
அந்த மோட்டார் சைக்கிளில் சாலவாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தேவராஜ் (வயது 31), அன்பழகன் (26) மற்றும் பாபு (32) ஆகிய மூவரும் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். இவர்களில் தேவராஜ் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அன்பழகன், பாபு இருவரும் பலத்த காயம் அடைந்தனர். காரை விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.
சிம்புவின் கார்தான்!:
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாலவாக்கம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த இருவரையும், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை பறிமுதல் செய்து, அதன் நம்பரை கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் விசாரித்தனர்.
அப்போது தான் சென்னை நட்சத்திர ஓட்டலில் காணாமல் போன நடிகர் சிம்புவின் கார்தான் இது என்பது தெரியவந்தது. காரை திருடி வந்த டிரைவர் வசந்த், குடி போதையில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய வசந்தை தேடி வருகின்றனர். இதுகுறித்து சிம்புவின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











