தெலுங்கில் பிசியாகும் ஷாம்

தமிழில் பெரிய ஹீரோவாக உயர முடியாமல் போன ஒரு சில திறமைசாலிகளில் ஷாமும் ஒருவர். மாதவனுக்கு கடும் போட்டியாக இருப்பார் என ஒரு காலத்தில் இவர் கணிக்கப்பட்டார். ஆனால் இதுவரை முன்னணி ஹீரோ வரிசையில் சேர முடியாத துர்பாக்கியசாலியாக இருக்கிறார் ஷாம்.
12பி, ஏபிசிடி, இயற்கை, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே என்று பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இதுவரை முன்னேற்றத்தைக் காணாமல் இருக்கிறார் ஷாம்.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் தெலுங்கில் ஷாமுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அவர் முதன் முதலில் தெலுங்கில் நடித்த கிக் அங்கு மெகா ஹிட் ஆகியுள்ளது. கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ஷாம் மீது தெலுங்குத் திரையுலகின் ஒட்டுமொத்த பார்வையும் குவிந்துள்ளது.
அத்தோடு நில்லாமல் ஏகப்பட்ட படங்களும் வந்து குவிந்துள்ளனவாம். திக்குமுக்காடிப் போயுள்ள ஷாம், அதிலிருந்து நான்கு படங்களைத் தேர்வு செய்து நடிக்கவுள்ளார்.
கிக் படத்தில் ஷாம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆனால் ஒரு சீனில் கூட அவர் யூனிபார்மில் இருக்க மாட்டார். படு ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக கலக்கி எடுத்திருக்கும் ஷாமுக்கு அங்கு ஏகோபித்த வரேவற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்புதான் படத்தை வெற்றி பெற வைத்துள்ளது. இதே படத்தைத்தான் இப்போது ஜெயம் ரவி நடிக்க, அவரது அண்ணாச்சி ஜெயம் ராஜா தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்.
தமிழ் ரீமேக்கிலும் தெலுங்கில் செய்த கேரக்டரை அப்படியே செய்யவுள்ளாராம் ஷாம்.
எப்படி 'பாய்' இப்படி கலக்குனீங்க என்று ஷாமிடம் கேட்டால், எனது பெரியப்பா ஜாபர் அலிதான் இதற்குக் காரணம். அவரை மனதில் வைத்துதான் இந்த கேரக்டரை செய்தேன் என்கிறார் படு குஷியாக.


Click it and Unblock the Notifications











