»   »  ரோபோட் ஸ்டார்ட்!-குசேலன் என்னாச்சு?

ரோபோட் ஸ்டார்ட்!-குசேலன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil
Rajini with Shankar
பிப்ரவரி 15ம் தேதி குசேலன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென ரோபோட் படத்தின் போட்டோ செஷன் தொடங்கியுள்ளது.

ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படத்தில் நடிக்கிறார். ஒன்று குசேலன். இன்னொன்று பிரமாண்ட ரோபோட்.

இதில் குசேலன் படம் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரோபோட் படத்தின் போட்டோ செஷன் நேற்று தொடங்கியுள்ளது. இதனால் குசேலன் என்னவாயிற்று என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் தான் ரோபோட். இதன் போட்டோ ஷூட் ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.

ரஜினிகாந்த்தை, சென்னையின் பிரபலமான பேஷன் போட்டோகிராபர் ஜி.வெங்கட்ராம் விதம் விதமான கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.

நேற்று காலையிலேயே இதற்காக ஏவி.எம். ஏசி தளத்திற்கு வந்து விட்டார் ரஜினி. அவருடன் ஷங்கர் குழுவினரும் கலந்து கொண்டனர்.
படத் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தியும் போட்டோ ஷூட்டின்போது உடன் இருந்தார்.

இப்படத்தில் ரஜினியின் மேக்கப்பை, சிவாஜி படத்தில் மேக்கப் கலைஞராக பணியாற்றிய பானுவும், ஹாலிவுட்டில் வந்துள்ள இருவரும் சேர்ந்து கவனிக்கப் போகிறார்கள்.

நேற்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிராபிக்ஸ் உத்திகளைப் பயன்படுத்தி விதவிதமாக ரீ டிசைன் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி இந்தப் படங்கள் மீடியாக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாம்.

ரோபோட் படத்திற்காக ரஜினிக்கு 20 விதமான சிறப்பு விக்குகளுக்கு ஷங்கர் அமெரிக்காவில் ஆர்டர் கொடுத்து வரவழைத்துள்ளார்.

ரோபோட்டில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூனும் நடிக்கவுள்ளார். இதுதவிர கேமராமேனாக முன்பு ஒப்பந்தமாகியிருந்த நீரவ் ஷா திடீரென விலகிக் கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதில் திரு கேமராமேனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குசேலன் படப்பிடிப்பு தொடங்குவதாக எதிர்பார்க்கப்பட்ட தினத்தில் ரோபோட் செஷன் தொடங்கியுள்ளதால் குசேலன் படப்பிடிப்பு தாமதமாகக் கூடும் எனத் தெரிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil