twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்

    By Staff
    |

    Kalaipuli G Sekaran
    ஒரு படம் வெற்றி அடைந்தால் உடனே தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் நடிகர்கள் படம் தோல்வியடைந்தால் சம்பளத்தைக் குறைக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவரும் இயக்குநருமான கலைப்புலி ஜி சேகரன்.

    சென்னை பிலிம்சேம்பரில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் கலைப்புலி ஜி.சேகரன் பேசியதாவது:

    ஒரு படம் வெற்றிபெற்றால் அதன் பலன் தயாரிப்பாளரை விட அந்த படத்தின் கதாநாயகன், டைரக்டர் ஆகிய இருவருக்குத்தான் அதிகமாக கிடைக்கிறது. படம் தோல்வி அடைந்தால் அதன் பாதிப்பு தயாரிப்பாளர் ஒருவரையே சேருகிறது. திரைப்படத் தொழிலில் இன்றுள்ள சிக்கல் இதுதான்.

    கதாநாயகர்கள் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் பணிபுரிகிற உதவி டைரக்டர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள் போன்றவர்கள்தான் வறுமையில் வாடுகிறார்கள்.

    சமீபத்தில், கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட ஒரு படம் திரைக்கு வந்தது. படம் சரியாகப் போகவில்லை. அந்த படத்தின் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தார்கள். ஆனால் அந்த படத்தின் கதாநாயகன் ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகச் சொல்கிறார்கள்.

    படம் வெற்றி பெற்றால் சம்பளத்தை உயர்த்துகிற கதாநாயகர்கள், படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை ஏன் குறைப்பதில்லை, இது என்ன நியாயம்?. ஒரு கதாநாயகனுக்கு ஒரு படம் வெற்றிபெற்றால், உடனே ரூ.1 கோடி சம்பளத்தை உயர்த்துகிறார்கள். அதேபோல் தோல்வி அடைந்தால் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்.

    இன்னொன்று, தயாரிப்பாளர்களைக் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு வந்ததும் கண்டுகொள்வதே இல்லை.

    ஒரு படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நாயகனுக்கும் தகராறு வருவது சகஜம். கதாநாயகன் பெரிய ஆளானாலும் கூட, இந்த தகராறை மனதில் வைத்துக் கொண்டு தயாரிப்பாளருக்கு உதவ மறுப்பதுடன், கவிழ்க்கவும் பார்க்கிறார்கள். கதாநாயகர்கள் அனுசரித்துப் போனால் தான் தயாரிப்பாளர்களின் கஷ்டங்கள் குறையும்.

    ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிற கதாநாயகன், படம் ரிலீசின்போது அதில் பாதி சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொள்ள வேண்டும். படம் ரிலீசாகி வெற்றிபெற்றால் மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றார் சேகரன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X