பொன்விழா ஆண்டில் கமல்: ஆகஸ்டில் மாநாடு?

5 வயது சிறுவனாக "களத்தூர் கண்ணம்மா" மூலம் தமிழில் அறிமுகமானவர் கமல். அதன் பிறகு சிறுவனாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைய, உதவி இயக்குநர், நடன உதவியாளர், ஸ்டன்ட் உதவியாளர் என பல வேலைகளை தனது 20 வயதுக்குள் பார்த்துவிட்டார் கமல். நிறைய நிறைய கற்றுக் கொண்டார்.
அதன் பிறகுதான் பாலச்சந்தரின் பொறுப்பில் வந்தார். துக்கடா வேடங்கள், வில்லன், எதிர்மறை நாயகன் என பல வேடங்கள் போட்டவர், அபூர்வ ராகங்களில் கதையின் நாயகனாக நடித்தார்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் திரையுலக வரலாற்றுப் பக்கங்களில் நிச்சயம் மறைக்க முடியாத சாதனைகள்தான்.
இப்போது திரையுலகில் 50வது ஆண்டை நிறைவு செய்யப் போகிறார் கமல்.
இந்த பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்புத் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருப்பதுதான் அவரது 'உன்னைப்போல் ஒருவன்'.
மாநாடு?
பொன்விழா படம் ஒருபக்கம் இருந்தாலும், ரசிகர்களான தங்களுக்கு உற்சாகம் தரும் விதத்தில் ஏதாவது கமல் செய்தாக வேண்டும் என விரும்புகின்றனர்.
எனவே பொன்விழா மாநாடு ஒன்றைக் கூட்டுமாறு கமலுக்கு நெருக்குதல் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விழாவுக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் போன்றவர்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகி்றது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான ரசிகர்களைத் திரட்டவும் யோசனை சொல்லியிருக்கிறார்களாம் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
ஆனால் மாநாடு மட்டும் வேண்டாம், அதற்கு அரசியல் முத்திரை விழுந்துவிடும் என்று கமல் இத்திட்டத்துக்கு இன்னும் ஒப்புக் கொள்ளவில்லையாம். எப்படியும் அவரைச் சம்மதிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார்களாம் நற்பணி இயக்கத்தினர்.


Click it and Unblock the Notifications











