செப். 25ல் மர்மயோகி ஷூட்டிங்

தசாவதாரத்தை வெகு சிறப்பாக முடித்த திருப்தியுடன் மர்மயோகிக்கு மாறி விட்டார் கமல். இப்படத்தை அவரே திரைக்கதை எழுதி இயக்குகிறார். கமல்ஹாசனுக்கு படத்தில் 3 ஜோடிகள். முதல் மற்றும் முதன்மை ஜோடியாக வருபவர் திரிஷா. 2வது நாயகியாக வருபவர் ஷ்ரியா. 3வது நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். அதாவது வில்லி கேரக்டரில் நடிக்கிறார் ஹேமமாலினி. இந்தக் கேரக்டரைப் பற்றி கமல் சொன்னவுடனேயே சட்டென்று ஒத்துக் கொண்டு விட்டாராம் ஹேமா.
படத்தில் இன்னொரு பிரபலத்தையும் இணைக்கிறார் கமல். அவர் பிக் பி அமிதாப் பச்சன். இதுதொடர்பாக அமிதாப்புடன் பேச்சு நடந்து வருகிறதாம்.
முதலில் படத் தொடக்க விழா மும்பையில் பிரமாண்டமான அளவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது ஒரு மாதம் தள்ளிப் போகிறது. அக்டோபர் 18ம் தேதி மும்பையில் படு பிரமாண்டமாக படத் தொடக்க விழாவை திட்டமிட்டுள்ளனராம்.
இருப்பினும் செப்டம்பர் 25ம் தேதி படப்பிடிப்பு தொடங்கி விடுகிறதாம்.
7வது நூற்றாண்டு கதை இது என்பதால் அது தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் கமல்ஹாசன் பக்காவாக செய்து முடித்து விட்டாராம். செட் பிராப்பர்டீஸையும் கூட கமல்ஹாசன் தெளிவாக தேர்வு செய்துள்ளார்.
படத்தில் வரும் 3 ஹீரோயின்களும் 3 கட்டங்களில் வருவது போல திரைக்கதை அமைந்துள்ளதாம்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே 2 பாடல்களைப் போட்டு சுடச் சுட கையில் கொடுத்து விட்டாராம் ரஹ்மான்.
படப்பிடிப்பை எந்தவித இடைவெளியும் இல்லாமல் விறுவிறுவென நடத்த கமல் திட்டமிட்டுள்ளார். இதற்காக திரிஷா உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களிடமும் பல்க் ஆக தேதி வாங்கி வைத்துள்ளனர். திரிஷா மட்டும் 3 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸும், பிரமிட் சாய்மீராவும் இணைந்து மர்மயோகியை உருவாக்குகின்றன.


Click it and Unblock the Notifications











