"அட்வான்ஸை கொடுங்க" - விஷாலுக்கு நெருக்கடி

தமிழில் போக்கிரி படம் எடுத்த ரமேஷ், விஷாலை வைத்து 'தீராத விளையாட்டு பிள்ளை' என்ற புதிய படத்தைத் தயாரிக்க திட்டமிட்டார்.
இதற்காக நடிகர் விஷால், நடிகை ஸ்ரேயா ஆகிய இருவருக்கும் ஒரு பெரிய தொகை 'அட்வான்சாக' கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரமேஷ் திட்டமிட்டபடி படத்தை தொடங்காமல், காலதாமதம் செய்ததாக விஷால் தரப்பில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா அந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக பட அதிபர் ரமேசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை தயாரிக்கும் உரிமையை வாங்கினார். அவருடைய தயாரிப்பில், படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விஷால் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், பட அதிபர் ரமேஷ் புகார் செய்துள்ளார்.
அதில், "தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடிப்பதற்காக, விஷாலுக்கு ஒரு பெரிய தொகையை அட்வான்சாக கொடுத்தேன். படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்யும்படி என்னிடம் கூறினார்.
அதன்படி, ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து, அவருக்கு அட்வான்சாக ஒரு பெரிய தொகையை கொடுத்தேன். படத்தை தயாரிக்கும் உரிமையை விஷாலின் அண்ணன் எடுத்துக்கொண்ட பின், விஷால், ஸ்ரேயா ஆகிய இருவருக்கும் நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை இதுவரை திருப்பி தரவில்லை.
இது தொடர்பாக நான் பலமுறை விக்ரம் கிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அவரை நேரில் சந்திக்கவும் முடியவில்லை. போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
எனவே விஷால், விக்ரம் கிருஷ்ணா ஆகிய இருவரிடம் இருந்தும் எனக்கு சேர வேண்டிய தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து தொடர்கிறது!


Click it and Unblock the Notifications











