தனுஷின் டைட்டில் வெறி!

ரஜினியின் மருமகனான தனுஷுக்கு, படங்களில் நடிப்பதுடன் கூடவே இன்னொரு முக்கிய வேலையும் இப்போது சேர்ந்து கொண்டுள்ளது. சூப்பர் ஹிட் ரஜினி படங்களின் டைட்டில்களை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்வதுதான் அது.
கிட்டத்தட்ட ரஜினியின் பெரும்பாலான படங்களின் டைட்டில்களை தனுஷ் தன் வசம் பதிவு செய்து வைத்துள்ளார். அவரிடம் 70 ரஜினி பட டைட்டில்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதை விட முக்கியமாக, ரஜினியை கைவிட்ட பாபா பட டைட்டிலையும் தனுஷ் பதிவு செய்துள்ளார். மேலும் அந்தப் பெயரில் ஒரு படம் செய்து அதை சூப்பர் ஹிட் ஆக்கப் போவதாகவும் உறுதி பூண்டுள்ளாராம் தனுஷ்.
இதுகுறித்து தனது நெருங்கிய நண்பர்களிடம் தனுஷ் கூறுகையில், ரஜினி பாபா என்ற டைட்டிலில் தோல்விப்படத்தைக் கொடுத்தார். அதே டைட்டிலுடன் நான் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுப்பேன் என்று கூறியுள்ளாராம் தனுஷ்.
ரஜினி பட டைட்டில்கள் மீது தனுஷுக்கு இப்போது தீவிர வெறியே பிறந்துள்ளதாம். எல்லாம் பொல்லாதவன் படம் ஓடியதால் ஏற்பட்ட டைட்டில் பைத்தியம் என்கிறார்கள்.
பொல்லாதவனுக்கு முன்பு வரை தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்து வந்தார் தனுஷ். பொல்லாதவன் வந்து அவரை மீட்டது. இதையடுத்து இனிமேல், ரஜினி பட டைட்டில்கள் இடம் பெறும் படத்திலேயே நடிப்பது என்ற முடிவுக்கு தனுஷ் வந்துள்ளது போலத் தெரிகிறது.
தனுஷ் அடுத்து நடிக்கப் போகும், சூரஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு படிக்காதவன் என்று வைத்துள்ளனர். அதேபோல தளபதி என்ற டைட்டிலையும் கைப்பற்ற தனுஷ் தீவிரமாக உள்ளார்.
ஆனால் இந்த டைட்டில் நடிகர் ஜே.கே.ரித்தீஷிடம் உள்ளதாம். இதனால் அதிருப்தி அடைந்த தனுஷ், ரித்தீஷிடம் தளபதியைக் கைப்பற்ற பேச்சு நடத்தி வருகிறாராம்.
பெயரில் என்ன இருக்கிறது? உள்ளே சரக்கும் இருக்க வேண்டும் என்பதை தனுஷ் உணர்ந்தால் நல்லது!


Click it and Unblock the Notifications











