ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு?

அரசியலில் ஈடுபடும் ஆர்வமோ, திட்டமோ இப்போதைக்கு இல்லை என்று ரஜினி தெளிவாகக் கூறிவந்தாலும், அவரது ரசிகர்கள் மட்டும் அடங்குவதாக இல்லை.
இன்னமும் பல இடங்களில் தங்கள் ஆர்வத்தை போஸ்டர்கள் அச்சிட்டும் அறிக்கைள் வெளியிட்டும் வற்புறுத்திய வண்ணம் உள்ளனர்.
அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தன்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும், தான் அரசியலுக்கு வரும் நிலையில் உள்ளபோது தனது ரசிகர்களை அழைத்துக் கொள்வதாகவும் ரஜினி அறிக்கை வெளியிட்டாலும் கூட, தங்களுக்கு அந்த உரிமை இருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டாக அறிக்கை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இன்னொரு பக்கம் ரசிகர்களை ரஜினி சந்திக்க வேண்டும் என்ற அனைத்து மாவட்ட ரசிகர்களின் கோரிக்கை இப்போது வலுப்பெறத் தொடங்கிவிட்டது.
முதலில், வெளிநாட்டில் எந்திரன் படப்பிடிப்பு முடிந்து திரும்பியதும் ரசிகர்களை அவர் அழைத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர் கோவா படப்பிடிப்புக்குப் பின் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரஜினியின் அறிக்கைக்குப் பிறகு, தீபாவளி நெருங்கும் சமயத்தில் ரஜினி பார்ப்பார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறிப்பிட்ட சிலர் சென்னை வந்து ரஜினியை சந்திக்கலாம் என்று சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டதாம். நேற்றும் இன்றும் இக்கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இக்கூட்டம் நடைபெறவில்லை. இப்போது மீண்டும் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அனைத்து மாவட்ட ரசிகர்களும் ரஜினிக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். தந்திகளும் அனுப்புகிறார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டப முகவரிக்கு இவைகள் வந்து குவிகின்றன. தினமும் கட்டு கட்டாக கடிதங்கள் குவிகின்றன. ரசிகர்களை ரஜினி உடனடியாக சந்திக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந் நிலையில் ரசிகர்களை ரஜினி சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ராகவேந்திரா மண்டப நிர்வாகி நம்மிடம் கூறுகையில், ரசிகர்களை இந்த தேதியில் சந்திப்பேன் என்று ரஜினி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் சந்திப்பு நடைபெறுவது மட்டும் உறுதி.
இந்நிலையில் பத்திரிகைகளே ஒரு தேதியை நிச்சயிப்பதும், பின்னர் ஒத்தி வைப்பு என செய்தி வெளியிட்டு ரஜினியைச் சங்கடத்துக்குள்ளாக்குவதும் தொடர்கிறது. எப்போது சந்திக்க வேண்டும் என்று அவரே அறிவிப்பார். ரசிகர்களுக்கு நேரடித் தகவல் வரும்வரை எதையும் நம்ப வேண்டாம் என்றார்.


Click it and Unblock the Notifications











