பிருத்விராஜ் மீண்டும் வில்லன்!

கனா கண்டேன் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாளத்து இளம் நாயகன் பிருத்விராஜ். அப்படத்தில் பிருத்விராஜ்தான் வில்லன். ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த், ஹீரோயின் கோபிகா.
இந்தப் படத்திற்குப் பிறகு பிருத்விராஜைத் தேடி நிறைய வில்லன் வாய்ப்புகள் வந்தன. ஆனால் அத்தனைக்கும் ஸாரி சொன்ன பிருத்விராஜ் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்தார்.
இதையடுத்து பாக்யராஜின் மகள் சரண்யாவுடன் பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் வெற்றி பெறவே, பிருத்விராஜும் ஹிட் ஆகி விட்டார்.
இதையடுத்து மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். பெரிய அளவில் மலையாள வாடை இல்லாமல் இவர் வசனம் பேசி நடிப்பதால், இவருக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் எதிர்பாராத ஒரு இடத்திலிருந்து எதிர்பாராத ஒரு வாய்ப்பு பிருத்வியைத் தேடி வந்தது. தேடி வந்தவர் மணிரத்னம், கொடுத்த வாய்ப்பு வில்லன்.
மணிரத்னம் படத்தில் பிட் ரோல் கிடைத்தால் கூட போதும் கலக்கி விடலாம் என அனைவருமே காத்திருக்கும்போது பிருத்வி மட்டும் தனது கொள்கையை தளர்த்தாமலா போவார். மணிரத்னத்திற்காக ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற முடிவை தளர்த்தி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் பிருத்வி ராஜ்.
மணிரத்னம், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், விக்ரமை வைத்து தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் பிருத்விராஜ்.
இப்படத்தின் வில்லன் வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்பினார் மணி. அதாவது ஸ்வீட் வில்லனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவரது மனதில் முதலில் தோன்றியவர் பிருத்விராஜ்தான். அவரை, அணுக பிருத்வியும் ஒப்புக் கொள்ள மணிக்கு அலைச்சல் இல்லாமல் போனது


Click it and Unblock the Notifications











