தமிழ் ஹீரோயின்களுக்கு வாய்ப்பளியுங்கள்-சுரேஷ்

பன்னீர் புஷ்பங்கள் மூலம் நடிகரானவர் சுரேஷ். அதேசமயத்தில் இவரைத் தேடி அலைகள் ஓய்வதில்லை பட வாய்ப்பும் வந்தது. ஆனால் முதலில் வந்த வாய்ப்பான பன்னீர் புஷ்பங்களைத் தேர்வு செய்து நடித்தவர் சுரேஷ்.
அதன் பிறகு தமிழில் நிறையப் படங்களில் ஹீரோவாக நடித்த சுரேஷ், பின்னர் தெலுங்குக்குப் போய் விட்டார். சமீபத்தில் அசல் படத்தில் வித்தியாசமான வில்லனாக வந்து கலக்கியிருந்தார். கிழக்குக் கடற்கரைச் சாலை படத்தில் பாவனாவின் அண்ணனாக வந்து வில்லத்தனம் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ் சினிமா குறித்த தனது கவலையை வெளியிட்டுள்ளார் சுரேஷ்.
80-களில் தமிழில் கதாநாயகனாக வலம் வந்தேன். 90களில் தெலுங்குக்கு போனேன். 265 படங்களில் நடித்தேன். பிறகு டி.வி. நிகழ்ச்சிகள் தயாரித்தேன். இப்போது மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்துள்ளேன்.
ஆடு புலி, வல்லகோட்டை, ரவுத்திரம் போன்ற படங்கள் கைவசம் உள்ளன. கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம் என எந்த கேரக்டர் கிடைத்தாலும் நடிப்பேன். தலைமுறைகள் மாறி இருப்பதால் அதற்கேற்றவாறு எனது கேரக்டர்கள் இருக்கும்.
இளைஞர்கள் அதிகம் தியேட்டருக்கு வருவதால் நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. தமிழ் பேசும் நடிகைகளுக்கு கதாநாயகி வாய்ப்பு அளிக்க வேண்டும். முன்பெல்லாம் பல தடவை படித்து பயந்து பயந்து வசனம் பேசுவோம். இப்போதைய மும்பை நடிககைகள் டப்பிங் பேசுவது இல்லை. வேறு ஒருவரை வைத்து பேசச் சொல்லுகிறார்கள். அவர்களால் பணம்தான் விரயமாகிறது. தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள்.
எனவே தமிழ் பேச தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இன்றைய கதாநாயகிகளில் திரிஷா, சினேகா போன்றோர் நன்றாக நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகம் வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று கூறியுள்ளார் சுரேஷ்.
'தமிழ்'த் திரைப்பட தயாரிப்பாளர்களும், 'தமிழ்' இயக்குநர்களும், 'தமிழ்' ஹீரோக்களும் சுரேஷ் சொல்தைப் பரிசீலிப்பார்களா?


Click it and Unblock the Notifications











