கருப்பை புற்றுநோய் சிகிச்சை-பெண்களுக்கு உதவ முன்வந்த விஷால்!

வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹீலியாஸ் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக டாக்டர் மஞ்சுளா தேவியும் தலைவராக டாக்டர் நந்தகுமாரும் பொறுப்பேற்றுள்ளனர்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சன் நெட்வொர்க் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இயக்குநர் பி வாசு, நடிகர் விஷால், அமைச்சர் தங்கம் தென்னரசு மனைவி மணிமேகலை தங்கம் தென்னரசு மற்றும் காவல்துறை கூடுதல் ஆணையர் ரவி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பி வாசு பேசுகையில், மிக ஆபத்தான கட்டத்தில் என்னைக் காத்தவர்கள் இந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் என்றார்.
நடிகர் விஷால் பேசுகையில்,
என்னுடைய குடும்ப நண்பர்கள்தான் இந்த மருத்துவமனையை ஆரம்பித்துள்ளனர். படப்பிடிப்பில் எனக்கு எக்கச்சக்கமாக அடிபட்டிருக்கிறது. எனக்கு அடிபட்டால், என்னுடைய டிரைவர், நேராக இவர்களிடம் தூக்கிக் வந்துவிடுவார். என் உடம்பு முழுக்க 25 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. அத்தனையும் டாக்டர் நந்தகுமார் போட்டதுதான்.
இந்த நேரத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் கருப்பை வாய் புற்று நோயை இந்த ஹீலியாஸ் மருத்துவமனையில் 3 ஊசிகளில் குணப்படுத்திவிடுவதாக அறிவித்துள்ளனர். ஆனால் ஊசிகளுக்கான விலை ரொம்ப காஸ்ட்லி என்றார்கள்.
இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழைப் பெண்கள் ஹீலியாஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
இந்த ஊசியை ஒருமுறை போட்டுக் கொண்டால் பின்னர் வாழ்நாள் முழுக்க கருப்பை புற்றுநோய் தாக்காது, பக்க விளைவுகளும் கிடையாது என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
விழாவில் பேசிய காவல்துறை கூடுதல் ஆணையர் ரவி ஆறுமுகம், மருத்துவமனையும் காவல் நிலையங்களும் மட்டும் அதிகரிக்கவே கூடாது என்றுதான் நான் சொல்வேன். எந்த நாட்டில் அதிக காவல் நிலையங்கள் உள்ளனவோ, அங்கு குற்றவாளிகள் அதிகம் என்று அர்த்தம். எங்கே அதிக மருத்துமனைகள் உள்ளனவோ அங்கு நிறைய நோயாளிகள் உள்ளனர் என்று அர்த்தம்.
ஆனால் காவல் நிலையம், மருத்துவமனையே இல்லாமல் இருக்க வேண்டும் என்பது கற்பனையான ஒன்றே. இன்றைக்கு சுற்றுச் சூழல் கெட்டுப் போய் புதுப்புது நோய்கள் நிறைய வந்துவிட்டன. மக்களை நோய் வருமுன் காக்க மருத்துமனைகளும், குற்றங்கள் பெருகாமல் தடுக்க காவல் நிலையங்களும் இருக்க வேண்டியது அவசியம்தான்.
எல்லோருக்கும் நான் சொல்வது, நோய் வருமுன் காத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்பதே, என்றார்.
நானோ கோட்டிங்!
வேளச்சேரி புற வழிச்சாலையில் அமைந்துள்ளது ஹீலியாஸ் மருத்துவமனை. இங்கு அறுவைச் சிகிச்சைக்கான அரங்குகள் முற்றிலும் நானோ கோட்டிங் செய்யப்பட்டுள்ளதாக அதன் மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவைச் சிகிச்சைக்கு முன் இந்த நானோ கோட்டிங் செய்துவிட்டால் போதும், 100 சதவிகிதம் கிருமிகளற்ற பாதுகாப்பான தன்மை கொண்டதாக ஆபரேஷன் தியேட்டர் மாறிவிடும்.
இந்தியாவிலேயே இந்த அதி உயர் பாதுகாப்பு கொண்ட மருத்துவமனை ஹீலியாஸ்தான் என்றார் டாக்டர் நந்தகுமார்.


Click it and Unblock the Notifications











