கமல்ஹாசனுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல-மலையாள நடிகர் சங்கம்

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கேரள அரசு இந்த விழாவை நடத்தியது. ஆனால் இந்த விழாவில் மலையாள நடிகர் சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை. புறக்கணித்து விட்டனர். மலையாள சினிமாவில் 50 ஆண்டுகளைத் தாண்டிய பல நடிகர்கள் இருக்கும்போது கமல்ஹாசனை கூட்டி வந்து விழா எடுப்பதா என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இதையடுத்து விழாவில் பேசிய முதல்வர் அச்சுதானந்தன் மலையாள நடிகர் சங்கத்தினரையும், நடிகர்களையும் கடுமையாக விமர்சித்தார். உண்மையான கலையை மதிக்கத் தெரியாதவர்கள் மலையாள நடிகர்கள் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.
இதற்கு அம்மா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் அச்சுதானந்தன் பேச்சு தற்போது கமலஹாசன் ரசிகர்களிடையேயும், தமிழர்களிடையேயும் எங்களை எதிரியாக்கி உள்ளது. நாங்கள் கமல்ஹாசனுக்கு ஒருபோதும் எதிரியல்ல. முதல்வர் தனது பேச்சை கடுமையாக்கி கொண்டதால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
மலையாள நடிகர்கள் கமல்ஹாசனின் சகோதரர்கள். எதிரிகள் அல்ல. கமல்ஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இதனால்தான் புறக்கணிப்பு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











