'கிக்' இந்தி ரீமேக்கில் சல்மானுடன் ஷாம்!!
தெலுங்கில் சுதாகர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜா - ஷாம் நடிப்பில் வெளியான கிக் படம் கிட்டத்தட்ட இந்தியாவையே ஒரு ரவுண்ட் வரும் போலிருக்கிறது.
தெலுங்கில் இந்தப் படம் பெற்ற வெற்றி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையில் மயங்கித்தான் தமிழில் தில்லாலங்கிடி என எடுத்தனர். தெலுங்கில் தான் செய்த அதே வேடத்தை தமிழிலும் செய்தார் ஷாம். படம் பரவாயில்லை எனும் அளவுக்கு போனது. அடுத்து கன்னடத்திலும் கிக் என்ற பெயரில் வெளியானது. படம் ஹிட்.
இப்போது இதே கிக் இந்திக்கும் போகிறது. இதில் நடிக்கப் போகிறவர் சல்மான் கான். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் ஷாமைச் சந்தித்த சல்மான், கிக் படத்தில் ஷாம் நடிப்பை புகழ்ந்து தள்ளினாராம்.
இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் கண்டிப்பாக ஷாம் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஷாம், "தெலுங்கு, தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளும் அந்த வேடத்தை நடித்துவிட்டேன். இப்போது இந்தியிலும் அந்த வாய்ப்பு தொடர்ந்தால் மகிழ்ச்சி", என்று கூறினாராம்.
உடனே சல்மான், 'இந்தியில் உங்கள் ஆரம்பம் இந்தப் படம் மூலம் இருக்கட்டும்' என்று கூற, ஷாம் சந்தோஷத்துடன் கடவுளுக்கு நன்றி சொன்னாராம்!
இப்போதைக்கு ஷாம் தமிழில் துரை இயக்கத்தில் '6' என்ற படத்திலும், தெலுங்கில் 4 படங்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











