twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்கள் சம்பளம் கிடுகிடு!

    By Staff
    |

    Nayanatara with Dhanush
    தமிழ் திரையுலகின் பெரும்பாலான குட்டி நடிகர்கள் தங்களது சம்பளத்தை படு உயரத்திற்குக் கொண்டு போயுள்ளனராம். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் உச்ச நடிகர்களின் சம்பளம்தான் மகா உயரத்தில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடி விட்டாலே உடனடியாக சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விடுவது வழக்கமாகி வருகிறது.

    ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினய். உன்னாலே உன்னாலே படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ஜஸ்ட் 3 லட்சம்தான். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம்கொண்டான் படத்தில் அவரது சம்பளம் ரூ. 9 லட்சமாகும். அடுத்த படத்திற்கு இந்த சம்பளம் கிடையாதாம். ரூ. 75 லட்சம்தான் இனி அவரது சம்பளமாம்.

    தமிழில் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்துள்ள கேரளத்தைச் சேர்ந்த பிருத்விராஜும் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டார். மொழி படத்தில் இவருக்கு 5 லட்சம்தான் சம்பளமாக கொடுத்தார்கள். ஆனால் இப்போது 5க்குப் பின்னால் ஒரு சைபரை சேர்த்து 50 கொடுங்க என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாராம் பிருத்விராஜ்.

    அதே போல கேரளாவைச் சேர்ந்தவரும் மலையாளப் படங்களில் சொற்ப சம்பளமே வாங்கிக் கொண்டுள்ளவருமான நரேன் ரூ. 1 கோடி சம்பளம் கேட்பதுதான் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். அஞ்சாதே படத்தின் வெற்றியால் தற்போதுள்ள 30 லட்சம் என்பதிலிருந்து 1 கோடிக்கு தனது சம்பளத்தை ஏற்றி விட்டாராம் நரேன்.

    வெளியூர்க்காரர்களான இவர்களே இவ்வளவு கேட்கும்போது உள்ளூர் நாயகர்கள் எப்படி கேட்பார்கள்?. கிட்டத்தட்ட அத்தனை இளம் நடிகர்களும் கோடிகளுக்குத் தாவி விட்டார்கள்.

    ரஜினி, கமல் தவிர இளம் நடிகர்களான விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகியோர் கோடிகளில்தான் சம்பளம் வாங்கிக் கொண்டுள்ளனர். அதற்கு அடுத்த வரிசை நடிகர்களான தனுஷ், சிம்பு ஆகியோரும் கோடிகளில்தான் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

    இப்போது 3வது வரிசை இளம் நடிகர்களும் கோடிகளுக்குத் தாவி விட்டனர். இவர்கள் எல்லாம் இவ்வளவு நாளாக கோடிகளுக்கு எப்போது தாவலாம் என்று காத்திருந்தனர். இப்போது தாவி விட்டனர்.

    தனுஷின் தற்போதைய சம்பளம் 3 கோடியாகி விட்டதாம். சிம்புவும் தனது சம்பளத்தை 2 கோடியாக்கி விட்டாராம். கூடவே சென்னை நகர விநியோக உரிமையையும் கேட்கிறாராம்.

    ஜெயம் ரவி, ஜீவா, ஜீவன், பரத், சுந்தர்.சி, நரேன், இயக்குநர் சேரன் ஆகியோர் கோடீஸ்வரர்களாகியுள்ள நடிகர்கள்.

    ஜெயம் ரவி, சந்தோஷ் சுப்ரமணியம் வெற்றிக்குப் பின்னர் தனது சம்பளத்தை 1 கோடியாக்கி விட்டாராம். பரத், ஹரியின் இயக்கத்தில் நடித்து வரும் சேவல் படத்திற்கு ரூ. 75 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் 1 கோடிக்குத் தாவியுள்ளார்.

    நேற்று ஹீரோவான சுந்தர்.சி.யின் இன்றைய சம்பளம் ரூ. 1 கோடியாகும். தான் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆவதால், சம்பள உயர்வு என்று சுந்தர்.சி. காரணம் கூறுகிறார்.

    ஹீரோக்கள் இப்படி சம்பளத்தை உயர்த்தி விட்டதால், நாமும் உயர்த்த வேண்டியதுதான் என்று நடிகைகள் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

    நடிகர், நடிகையரின் இந்த சம்பள முடிவால் தயாரிப்பாளர்கள் கதி கலங்கியுள்ளனர். ஆனால் இந்தக் கலக்கமெல்லாம் சாதாரண தயாரிப்பாளர்களுக்குத்தான். படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுகுறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X