twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

    By Staff
    |

    Kamal with Sasi Kumar
    ரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன்.

    வெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சசிகுமார். அவரது அடுத்த படம் பசங்க. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. தயாரிப்போடு நிறுத்திக் கொண்டார்.

    சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் இயக்குகிறார்.

    படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் படம் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார்.

    விழாவில் கமல் பேசியது ஒவ்வொரு ரசிகரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவரது பேச்சின் ஒரு பகுதி:

    "என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். என்னை விட நல்ல நல்ல படங்களை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சினிமா என்பது மொழி. அதை நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுகிறீர்கள். நான், நாகேஷிடம்தான் நகைச்சுவையை கற்றுக்கொண்டேன். சிவாஜியிடம் நடிப்பை கற்றுக்கொண்டேன். பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா போன்ற மேதைகளிடம் பாட்டைக் கற்றுக்கொண்டேன்.

    தமிழ் சினிமா, யதார்த்தத்தை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், வர்த்தகத்தில் இருப்பவர்கள், குழந்தைகளாக இருப்பதுதான். வெற்றி ஒன்றை மட்டுமே நாடும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் அவர்கள். ஒருவிதத்தில், ரசிகர்களும் இதற்கு காரணம். ஓட்டுப் போடுவதற்கு சோம்பல் கொள்வது மாதிரி, நல்ல படம் எது, கெட்ட படம் எது? என்பதைச் சொல்வதற்கும் சோம்பல்தனம் அவர்களுக்கு.

    எந்த மாதிரி படம் எடுக்க வேண்டும், எந்த மாதிரி படம் எடுக்கக் கூடாது? என்பதை நீங்கள்தான் எங்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் நல்லதையும் சொல்வதில்லை. கெட்டதையும் சொல்வதில்லை.

    ரசிகர்கள், நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அது திரைமொழியைச் செழுமைப்படுத்த உதவும்.

    நீங்கள் கேட்டால், போதை பொருளைக்கூட நாங்கள் விற்போம். அவ்வளவு நல்ல வியாபாரிகள் நாங்கள். சில நல்ல படங்கள் ஓடுவதில்லை. அந்த படங்களை இயக்கிய இயக்குநர்கள் இன்று மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறார்கள். அது, நிஜமாவே உங்களுக்குத்தான் ஆபத்து.

    செக்ஸ் படங்களை...

    எனக்கு தெரிந்த தணிக்கை அதிகாரி கோட்டி ஆனந்த், செக்ஸ் படங்களை ட்ரிபிள் எக்ஸ் என்ற முத்திரை குத்தி காட்டிவிடலாம் என்றார். இதனாலேயே அவரை வேலையைவிட்டு தூக்கிவிட்டார்கள். அவர் சொன்னதுபோல் செய்தால், குடும்ப பெண்கள் அந்தப் படங்களை பார்க்காமல் ஒதுங்கி விடுவார்கள். கழிவுநீருக்காக தனியாக குழாய் இருப்பது மாதிரிதான்... இப்படி, பிரித்தால்தான் குழந்தைகள் படம் அதிகமாக வரும்.

    செக்ஸ் நிராகரிக்க முடியாதது!

    'செக்ஸ்'சை நம் வாழ்க்கையில் இருந்து நிராகரிக்க முடியாது. இல்லையென்றால், ஜனத்தொகை 100 கோடி ஆகியிருக்காது. இந்த ஜனத் தொகையை கொக்கு கொண்டுவந்து போடவில்லை.

    குடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். சமூகம் மற்றும் மதிப்பீடுகள் மாறிக்கொண்டு வருவது நாம் கண்ணை மூடிக்கொள்வதால் மட்டும் நின்றுவிடப்போவதில்லை.

    ஸ்லம்டாக் மில்லினர்!

    ஸ்லம் டாக் மில்லினர் படத்தில் இந்தியாவின் ஏழ்மையை காட்டிவிட்டார்கள் என்று குறை சொல்கிறார்கள். இல்லாததைக் காட்டவில்லையே. இருப்பதைத்தான் காட்டியிருக்கிறார்கள்! வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் கண்களில் விமானத்தில் இருந்து இறங்கும்போதே தெரிவது, இங்குள்ள வறுமைதான். கட்டிடங்கள் அதற்குப் பின்னால்தான் தெரிகிறது.

    அதைப் பார்த்துவிட்டு அவன், சாப்பிடுவதையே குறைத்து விடுகிறான். நாம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறான். எனக்கு டேனி பாயலைத் தெரியாது. அந்த படத்துக்கு கிடைத்த வெற்றி, ரஹ்மானுக்கு கிடைத்த வெற்றி. ஒரு ஆங்கில படத்துக்குக் கிடைத்த வெற்றி...", என்றார் கமல்.

    விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, கவிஞர்கள் யுகபாரதி, தாமரை, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், டைரக்டர்கள் அமீர், சசிகுமார், பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோரும் பேசினார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X