டோக்கியோ படவிழாவில் குசேலன்!

By Staff

Kuselan
பக்கத்திலிருக்கிற கர்நாடகத்தில் குசேலனை திரையிட அனுமதிப்பார்களா மாட்டார்களா என்ற பதட்டத்திலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

வருகிற அக்டோபர் மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள சர்வதேசப் படவிழாவில் குசேலன் திரைப் படத்தைத் திரையிட விழாக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள ரஜினிகாந்தின் படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஜப்பான், கொரியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்திய நடிகர்களில் மக்கள் திலகம் எம்ஜிஆருக்குப் பிறகு ரஜினிக்கு மட்டுமே இந்த நாடுகளில் ரசிகர் மன்றங்கள் உள்ளன. ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பானில் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது நினைவிருக்கலாம்..

அதன்பிறகு வெளியான ஒவ்வொரு ரஜினி படத்துக்கும் தமிழ்நாட்டில் கிடைத்த அதே வரவேற்பு ஜப்பான் ரசிகர்கள் மத்தியிலும் கிடைத்து வருகிறது. ஆண்டுதோறும் ரஜினியின் பிறந்த தினத்தை வெகு விமரிசையாக, ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகிறார்கள் ஜப்பானில் வசிக்கும் ரஜின் ரசிகர்கள். இதில் ஏராளமான ஜப்பான் இளைஞர்களும், பெண்களும் அடக்கம்.

இதுவரை ரஜினியைப் பற்றி மட்டும் ஜப்பான் மொழியில் 30க்கும் மேற்பட்ட குறும் படங்கள் மற்றும் செய்திப் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த ஊர் நடிகர்களுக்குக் கூட கிடைக்காத பெருமை இது.

இப்போது முதல்முறையாக குசேலனை ஜப்பானில் நேரடியாகவே ரிலீஸ் செய்கிறது பிரமிட் சாய்மிரா நிறுவனம்.

இதுகுறித்து அந்நிறுவன இயக்குநர்களில் ஒருவரான வெங்கடகிருஷ்ணன் கூறுகையில், குசேலன் படத்துக்கு ஜப்பானில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு பிரமிக்க வைக்கிறது. நம் சூப்பர் ஸ்டாருக்கு அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பும் அன்பும் நெகிழ வைக்கிறது. தமிழகத்தைப் போலவே பிரமாண்ட முறையில் ஜப்பானில் குசேலனை ரிலீஸ் செய்கிறோம், என்றார்.

பிரபல நடிகர் பிரிவில் தகுதி

இதற்கிடையே வரும் அக்டோபர் மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் குசேலன் திரையிடப்படுகிறது. ஜப்பானின் மிகப் பிரபல வெளிநாட்டு நடிகரின் படம் என்ற சிறப்புத் தகுதியில் இந்தப் படத்தைத் திரையிடுகிறார்கள் விழாக் குழுவினர்.

எனவே இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டு விழாவைத் துவக்கி வைக்க வேண்டும் என டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாக் குழு ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அழைப்பு விரைவில் ஜப்பான் நாட்டு கலாச்சார அமைச்சகம் மூலம் ரஜினிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அவர் நிச்சயம் விவாவுக்கு வருவார் என்றும் டோக்கியோ ரஜினி ரசிகர் மன்றங்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளன.

ரஜினியின் முடிவு

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் துவக்கி வைக்க ரஜினிக்குதான் முதலில் அழைப்பு விடப்பட்டது. ஆனால் அவர் விழாவுக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

அதே போல லண்டனில் நடந்த சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள மறுத்துவிட்டவர் ரஜினி. ஆனால் இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டது டோக்கியோ திரைப்பட விழா. ஆசிய அளவில் ஷாங்காய் திரைப்பட விழாவுக்கு இணையாகக் கருதப்படும் திரைப்படத் திருவிழா இது.

1985-ம் ஆண்டு முதல் நடந்து வரும் டோக்கியோ திரைப்பட விழாவுக்கு இது 21-வது ஆண்டு. ஆரம்பத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த பிரமாண்ட விழா, 1992 முதல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் வழங்கப்படும் அகிரா குரோசேவா விருது படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய கவுரவமாகப் பார்க்கப்படுகிறது.

எனவே இந்த விழாவில் இந்திய திரையுலகின் பிரதிநிதியாக ரஜினிகாந்த் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிது. ஜப்பான் மற்றும் கொரியாவைச் சேர்ந்த அவரது ரசிகர் மன்றங்களும் விழாவில் அவரைக் கலந்து கொள்ள வற்புறுத்தி கடிதங்கள் எழுதி வருகின்றன.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஜப்பான் திரைப்பட விழாவுக்கு போய் தனது ஜப்பான் ரசிகர்களைச் சந்திக்கும் ஆசை கைகூடும் என்றே நம்புவதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இப்படியொரு கவுரவம் வேறு யாருக்காவது கிடைத்திருந்தால் இந்நேரம் ஊர் அதகளப்பட்டிருக்கும். ஆனால் ரஜினி....

அதான் எப்பவும் அவர் சூப்பர் ஸ்டார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X