ஷாருக்கானுக்கு மலேசியாவின் 'டடுக்' பட்டம்

மலேசியாவின் மலாக்கா மாநில அரசு இந்த விருதினை ஷாருக் கானுக்கு அளிக்கிறது. மலாக்கா மாநிலத்தை சிறந்த சுற்றுலாத் தளமாக்க ஷாருக் கான் உதவியதற்காக இந்த கெளவரத்தை அந்த மாநில அரசு அளிக்கிறது.
மலாக்கா மாநிலத்தில் ஷாருக்கானின் ஒன் டு கா போர் உள்ளிட்ட இரு படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 6ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் மலேசிய பாரம்பரிய உடை அணிந்து வந்து டடுக் பட்டத்தை ஷாருக் கான் பெற்றுக் கொள்வார்.
இதுகுறித்து மாநில அரசின் செயலாளர் ஓமர் கசே கூறுகையில், மலாய் இனத்தவரின் பாரம்பரிய உடையில் ஷாருக் கான் விழாவில் கலந்து கொள்வார்.
வெகு நாட்களுக்கு முன்பே மலாக்காவுக்கு ஷாருக் கான் வந்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து அவருக்கு வேலைப்பளு அதிகம் இருந்ததால் வர முடியவில்லை. எனவேதான் டிசம்பர் 6ம் தேதியன்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலாய் உடையில் வந்து மலேசியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான டடுக் பட்டத்தை பெறும் முதல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான். இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்.
பட்டம் வாங்குவதற்காக ஒரே ஒரு நாள் மலாக்கா பயணப்படுகிறார் ஷாருக்கான்.
ஷாருக் கானுக்கு டடுக் பட்டத்தை வழங்குவதற்கு மலேசியாவில் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. உள்ளூர் நடிகர்களுக்குத் தராமல் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு டடுக் பட்டத்தை தருவதா என்று மலாக்கா அரசுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், மலாய் இனத்தவர்களில் பலர் ஷாருக்கானின் ரசிகர்கள் என்பதால் இந்த எதிர்ப்பை மலாக்கா அரசு கண்டுகொள்ளவில்லை. ஷாருக்கானின் படங்கள் மலேசியாவில், பஹாசா மலாய் மொழியில் சப் டைட்டில் போட்டு ரிலீஸாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அது என்ன 'டடுக்'?:
1965ம் ஆண்டு முதல் இந்த 'டடுக்' பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநில அரசும், மலேசிய மத்திய அரசும் இந்த பட்டத்தை வழங்க தகுதி பெற்றவையாகும்.
ஆண்களுக்கு 'டடுக்' என்றும், பெண்களுக்கு 'டடின் படுகா' என்ற பெயரிலும் இந்தப் பட்டம் வழங்கப்படும்.
இதேபோல 'டத்தோ' என்ற பட்டமும் மலேசியாவில் வழங்கப்படுகிறது. இந்த 'டத்தோ' பட்டம், ஒவ்வொரு மாநில அரசும் தனிப்பட்ட முறையில் வழங்குவதாகும். அதாவது, அந்தந்த மாநில சுல்தான்கள் இந்தப் பட்டத்தினை வழங்குவார்கள். மாநில சட்டசபையின் பரிந்துரையின்பேரில் இது வழங்கப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications











