'மகிழ்ச்சி' திரைப்படமும் கமலின் மகிழ்ச்சியும்!

நீலபத்மநாபன் எழுதியுள்ள 'தலைமுறைகள்' என்ற நாவல்தான் 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாகிறது. இப்படத்தை வ கௌதமன் இயக்குகிறார். அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவர் காதலே நிம்மதி என்ற படத்தையும் சந்தனக் காடு தொடரையும் எடுத்தவர்.
மகிழ்ச்சி படத்தில் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். சீமான், பிரகாஷ் ராஜ், கார்த்திகா ஆகியோரும் நடித்துள்ளனர். அதிர்வு திரைப்பட்டறை சார்பில் த.மணிவண்ணன் தயாரிக்கிறார்.
தலைமுறைகள் நாவலை படமாக்குவதை அறிந்து கமலஹாசன் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், "நம்நாட்டில் தலைசிறந்த நாவல்களில் ஒன்றான 'தலைமுறைகள்', 'மகிழ்ச்சி' என்ற பெயரில் படமாக வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த படத்தின் இயக்குனர் வ கௌதமன். கதாநாயகனும் கூட. இவருக்கு இந்த பெயரை வைத்தது பெரியார். அவர் செய்திருக்கும் இந்த வேலை பாராட்டுக்குரியது.
சினிமா சார்ந்து இலக்கியத்தை நேசிப்பவர்கள் என்னைப்போல் நிறையபேர் உள்ளனர். இலக்கியத்துக்கும், தமிழ் சினிமாவிற்கும் ஏற்பட்டு விட்ட அகண்ட இடை வெளிக்கு பாலமாக சிலர் வேண்டும் என்று 30 வருடங்களுக்கு முன்னால் பேசியவன் நான்.
ஆனால் இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. அப்படிப்பட்ட வறண்ட சூழ்நிலையில் இந்த மாதிரி நிகழ்வுகள் முக்கியமானவை. ஒரு புதிய சுழற்சியின் ஆரம்பம் இது. பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் இத்தகைய சுழற்சியை, மறுபிறப்பைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..." என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











