twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரஞ்சீவி ரசிகர்கள் அராஜகம்-ராஜசேகருக்கு அடி

    By Staff
    |

    Rajasekar with Jeevitha
    தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் (இது தாண்டா போலீஸ் புகழ்) மீது சிரஞ்சீவி ரசிகர்கள் வெறித்தனமான தாக்குதல் மேற்கொண்டனர். இதில் ராஜசேகரும், அவரது மகள் ஷிவானியும் காயமடைந்தனர். இதனால் ஆந்திராவில் பரபரப்பு நிலவுகிறது.

    தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார். சமீபகாலமாக படத் தயாரிப்பிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி நடிகை ஜீவிதா. இவர்களுக்கு ஷிவானி உள்ளிட்ட 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் ராஜசேகர் பேசினார். அப்போது ஒரு செய்தியாளர், சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கப் போகிறாரே அதில் சேருவீர்களா என்று கேட்டார்.

    அதற்கு டாக்டர் ராஜசேகர், எந்தச் சூழ்நிலையிலும் சிரஞ்சீவி ஆரம்பிக்கும் கட்சியில் நான் சேர மாட்டேன். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. பிறகு எப்படி நான் அவருடன் சேர முடியும். நான் நீண்ட காலமாகவே காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். எனவே சிரஞ்சீவி கட்சியில் சேரும் எண்ணமே இல்லை என்றார் ராஜசேகர்.

    அவரது இந்தப் பேட்டியால் சிரஞ்சீவி ரசிகர்கள் கொதிப்படைந்தனர். இந்த நிலையில், ராஜசேகர் தனது மனைவி ஜீவிதா, இரு மகள்களுடன் இன்று அதிகாலை ஹைதராபாத் திரும்பினார். நம்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    பஞ்சகுட்டா பகுதியில் கார் வந்தபோது திடீரென சிரஞ்சீவி ரசிகர்கள் பெருமளவில் திரண்டு காரை மறித்தனர். பின்னர் கார் மீது கற்களை வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதலில் இறங்கினர்.

    இதில் ராஜசேகருக்கும், ஷிவானிக்கும் காயம் ஏற்பட்டது. சிறுமி ஷிவானியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்து கதறி அழுதார். ஜீவிதாவும், அவரது இன்னொரு மகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கலைத்து விரட்டினர்.

    பின்னர் ராஜசேகரும், ஷிவானியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் கொந்தளிப்படைந்த ஜீவிதா, பஞ்சகுட்டா காவல் நிலையத்திற்கு தனது குழந்தைகள், கணவருடன் சென்று புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீஸார் 147, 148, 341, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டாக்டர் ராஜசேகர், தனது குடும்பத்தினர் மீதான இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், இது ஜனநாயக நாடு. மக்களாட்சி நடைபெறும் நாடு. இந்த நாட்டில் ஒருவர் தனது சொந்தக் கருத்தைக் கூற உரிமை இல்லையா?.

    ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்தால் உடனே அனைவரும் போய் அதில் சேர்ந்து விட வேண்டும் என ஏதாவது சட்டம் உள்ளதா.

    எனது கருத்தைக் கூற எனக்கு முழு உரிமையும், சுதந்திரமும் உள்ளது. இதற்காக நான் சிரஞ்சீவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் கேட்கவும் மாட்டேன் என்றார்.

    டாக்டர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான இந்தத் தாக்குதல் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மன்னிப்பு கேட்டார் சிரஞ்சீவி

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X