சிபிஎஸ்இ பாடமான ரஜினி!

இந்த ஆண்டு ரஜினிக்கு சூப்பர் ஆண்டு. ஆண்டின் தொடக்கத்தில், என்டிடிவியின் சிறந்த பொழுதுபோக்காளர் விருதினை பிரதமர் மன்மோகன் சிங் கையால் பெற்றார்.
அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு மை நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற அவரது வாழக்கை வரலாற்று நூல் வெளியானது.
இந்த நிலையில் இப்போது ரஜினிகாந்த்தின் வாழ்க்கை குறித்த ஒரு பகுதி, சிபிஎஸ்இ 6ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் இடம் பெற்றுள்ளதாம்.
இந்தியாவிலேயே ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம், அதிலும் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
டிக்னிட்டி ஆப் ஒர்க் என்ற தலைப்பின் கீழ் ரஜினி குறித்த பாடப் பகுதி இடம் பெற்றுள்ளது. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இதை பிரசுரித்துள்ளது. பஸ் கண்டக்டராக இருந்து, சூப்பர் ஸ்டராக உயர்ந்தது வரையிலான ரஜினியின் வாழ்க்கை நிலையை இதில் சுருக்கமாக கூறியுள்ளனர்.
70களில் பெங்களூரில், கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ரஜினி கண்டக்டராக பணியாற்றியபோது, அவருடன் டிரைவராகப் பணியாற்றிய, ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான பகதூர், ரஜினி குறித்து சொல்வது போல இந்தப் பாடம் அமைந்துள்ளது.
பகதூர்தான் ரஜினியின் நடிப்பாற்றலை உணர்ந்து, அவரை சென்னை அடையாரில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு ஊக்குவித்தவர். அவர்தான் ரஜினியை கட்டாயப்படுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தார். ரஜினி சென்னைக்கு வந்து 2 ஆண்டுகள் படித்தபோது, அவருக்கான செலவுகளையும் பகதூரே பார்த்துக் கொண்டார்.
இன்னும் பகதூருடனான ரஜினியின் ஆழமான நட்பு, இருவரும் பிரியாமல் நட்போடு இருப்பதற்கான காரணம் உள்ளிட்டவையும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 230 வார்த்தைகளில் இப்பாடம் அமைந்துள்ளது. பாடத்தின் இறுதியில், மாணவ, மாணவியருக்கு கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
கடின உழைப்பு பலன் தரும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே ரஜினி குறித்த பாடம் வைக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யுனிவர்ச்சி பிரஸ்ஸின் நிர்வாக இயக்குநர் மன்சர் கான் கூறியுள்ளார்.
சாதாரண நிலையிலிருந்து மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் நிலைக்கு ரஜினி உயர்ந்திருப்பதை ஒவ்வொரு குழந்தையும் மனதில் கொண்டு, தாங்களும் அது போல உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர் என்கிறார்.


Click it and Unblock the Notifications











