கமல் சாலையாகும் எல்டாம்ஸ் சாலை!.. போயஸ் சாலைக்கு ரஜினி பெயர்?
திரையுலகில் பொன்விழா கொண்டாடும் கமல்ஹாஸனை கவுரவிப்பதற்காக எல்டாம்ஸ் சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு சாதகமான பதிலை முதல்வர் அலுவலகம் அனுப்பியுள்ளது.
இத்தகவலை சரத்குமாரே சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாஸன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் அவரது அலுவலகம் அமைந்துள்ள எல்டாம்ஸ் சாலைக்கு 'கமல்ஹாஸன் சாலை' எனப் பெயர் சூட்ட வேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருப்பதாக அறிவித்தார். கமல்ஹாஸன் பிறந்த நாளில் இந்த அறிவிப்பு வெளியாகக்கூடும்.
இதற்கிடையே, எல்டாம்ஸ் சாலை பெயர் மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்சினிமாவின் 30 ஆண்டுகளுக்கும் மேல் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினியையும் கவுரவிக்கும் விதத்தில் அவருடைய பெயரை ஒரு சாலைக்கு சூட்டுவது குறித்தும் முதல்வர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
ரஜினி - கமல் இருவரையுமே ஒரு சேரக் கவுரவிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுவதால், ரஜினி வசிக்கும் போயஸ் தோட்ட சாலை அல்லது கோடம்பாக்கத்தின் வாசலான ஆற்காடு சாலைக்கு ரஜினி பெயரைச் சூட்ட ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ரஜினி பிறந்த நாளுக்கு முன் இந்த அறிவிப்பும் வெளியாகக் கூடும் என்றும் முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











