கட்சி தொடங்க ரஜினிக்கு நெருக்கடி-சத்தியநாராயணா வீடு முற்றுகை!!

1995ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பட ரிலீசின்போதும் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என செய்திகள் பரபரப்படுவதும், பின்னர் அவை காற்றோடு கரைந்து போய்விடுவதும் வாடிக்கையான விஷயங்கள்.
இதனால் அவர் அரசியலுக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்று மக்களும் நினைக்கத் தொடங்கிவிட்டனர். வராவிட்டால் ரொம்ப நல்லது என பெரும்பாலான மக்கள் நினைப்பதாக சமீபத்திய லயோலா கல்லூரி சர்வே சொல்கிறது.
கடந்த 13 ஆண்டுகளில் இருமுறை அவர் கட்சி துவங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தும், பிற கட்சிகளின் நெருக்கடி, உறவினர்களின் ஆலோசனை, சில 'அதி புத்திசாலி' பத்திரிக்கையாளர்கள் காரணமாக அந்த வாய்ப்புகளைக் கோட்டை விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது குசேலன் படம் கடும் நெருக்கடிகளுக்குள்ளானது. படமும் பெரும் தோல்வியுற்றது. இதனால் ரஜினியின் செல்வாக்கு குறித்து மீண்டும் கேள்வி எழுந்தது.
இந்த சூழலில்தான், அவர் புதிய அரசியல் கட்சி அல்லது சமூக நல இயக்கம் ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கு முன்னோட்டமாக ரசிகர்களை அக்டோபர் முதல் வாரம் சந்திக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகத் துவங்கின.
ஆனால், இது ரோபோ ரிலீஸை மனதில் வைத்து பரப்பப்படும் செய்தியோ என்ற சந்தேகம் எழுந்தது.
இந் நிலையில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா, இந்த ரசிகர் சந்திப்பை மட்டும் உறுதிப்படுத்தி பேட்டியளித்திருந்தார்.
சத்தியநாராயணா வீடு முற்றுகை:
ஏற்கெனவே ரஜினிகாந்தின் அனைத்து மன்றங்களை சேர்ந்தவர்களும் சென்னையில் ஒன்று கூடி கூட்டம் நடத்தி, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விட முடிவு செய்திருந்தபோது, சத்யநாராயணாதான் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். அப்போதுதான் ரஜினிகாந்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.
எனவே சென்னை கோபாலபுரத்தில் உள்ள சத்யநாராயணாவின் வீட்டுமுன் ரசிகர்கள் நேற்று கூடினர். ரஜினிகாந்தை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். அவரிடம் நாங்கள் பேசிக் கொள்கிறோம். அவரை அரசியலுக்கு கொண்டு வருவது எங்கள் பொறுப்பு, என்று சத்யநாராயணாவிடம் ரசிகர்கள் வற்புறுத்தினர்.
இன்னும் இரு தினங்கள் பொறுத்திருங்கள். நான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறேன் என அவர்களைச் சமாதானப்படுத்தி சத்யநாராயணா அனுப்பி வைத்துள்ளார்.
இதில் கலந்து கொண்ட பல ரசிகர்கள், ரஜினி இந்த முறை அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்றும், இதைவிட்டால் இனி அவர் பொது வாழ்க்கைக்கு வர வேறு சந்தர்ப்பம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











